இந்தியாவின் கதை - அத்தியாயம் 4. அலெக்சாண்டரின் தோல்வி
ஒரு திருமண விழாவில் தன் சொந்த காவலர்களாலேயே கிரேக்கத்தின் மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப் கொலை செய்யப் படுகிறார். 20 வயதே ஆன அலெக்சாண்டர் அரசராக முடி சூடினார். இதனை அறிந்த மற்ற நாடுகள் இனி மாசிடோனியா ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்ட முடியாது என கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ஏத்தென்ஸ் அதில் குறிப்பிடத் தகுந்தது. ஒரு 20 வயது சின்னப் பையன் தானே என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர். ஆனால் இது தான் அலெக்சாண்டரை கோபங் கொள்ள வைத்தது. தன் படைகளை திரட்டி கொண்டு சென்றார். அனைவரையும் தன் வீரத்தால் மீண்டும் கட்டுக்குள் வைத்தார். கிரேக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளையும் பிடித்தார். அடுத்தாக தன் தந்தையின் கனவான பாரசீகத்தை நோக்கி சென்றார். 70,000 பேர் கொண்ட தன் படையில் சுமார் 35,000 பேரை கிரேக்கத்தில் விட்டுச் சென்றார். தன் நாட்டை பிறர் தாக்கினால் பாதுகாக்க இந்த படை இருந்தது. ...