இந்தியாவின் கதை - அத்தியாயம் 4. அலெக்சாண்டரின் தோல்வி

                                ஒரு திருமண விழாவில் தன் சொந்த காவலர்களாலேயே கிரேக்கத்தின் மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப் கொலை செய்யப் படுகிறார். 20 வயதே ஆன அலெக்சாண்டர் அரசராக முடி சூடினார். இதனை அறிந்த மற்ற நாடுகள் இனி மாசிடோனியா ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்ட முடியாது என கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ஏத்தென்ஸ் அதில் குறிப்பிடத் தகுந்தது. ஒரு 20 வயது சின்னப் பையன் தானே என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர். ஆனால் இது தான் அலெக்சாண்டரை கோபங் கொள்ள வைத்தது. தன் படைகளை திரட்டி கொண்டு சென்றார். அனைவரையும் தன் வீரத்தால் மீண்டும் கட்டுக்குள் வைத்தார். கிரேக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளையும் பிடித்தார். அடுத்தாக தன் தந்தையின் கனவான பாரசீகத்தை நோக்கி சென்றார். 70,000 பேர் கொண்ட தன் படையில் சுமார் 35,000 பேரை கிரேக்கத்தில் விட்டுச் சென்றார். தன் நாட்டை பிறர் தாக்கினால் பாதுகாக்க இந்த படை இருந்தது.
                                  மீதமுள்ள 35,000 பேர் கொண்ட ஒரு படை பாரசீகத்தை நோக்கி சென்றது. தன் தந்தையின் கனவிற்காக பாரசீகத்தின் டேரியஸ் மன்னனை போரில் வென்றார். கிரேக்கம், பாரசீகத்தை முழுமையாக கைப்பற்றினார், ஒரு தோல்வியையும் சந்திக்காமல். அடுத்ததாக எகிப்து.  கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி எகிப்து அலெக்சாண்டரை அரசனாக ஏற்றுக் கொண்டது. இதனால் வியந்து எகிப்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். அதன் பெயரே "அலெக்சான்றியா" இந்த நகரம் இன்றும் உள்ளது. பின்னரும் தன் சொந்த நாடு திரும்பாமல், உலகத்தையே கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் முன்னேறி வருகிறார். அலெக்சாண்டரிடம் சிலர் இந்தியா தான் உலகத்தின் எல்லை,  ஏனெனில் அதன் எல்லைக்குப் பிறகு வெறும் கடல் மட்டும் தான் என்ற சொல்ல,  உலகத்தின் எல்லையையும் வெல்ல,  ஆவலோடு இந்தியாவின் எல்லைக்கு வந்து நின்ற கிரேக்கப் படைக்கு முன்னால் மாபெரும் சவால் காத்திருந்தது.
                              வடக்கிலிருந்து இந்தியாவிற்க்குள் நுழைய வேண்டும் என்றால், விண்ணை முட்டும் இமய மலை தொடரையோ,  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதியையோ கடக்க வேண்டும். இது இயற்கை நமக்கு அமைத்து தந்த அரண். அலெக்சாண்டரின் கிரேக்க படை இமய மலை தொடரில் சற்று சுலபமான வழியாக இந்து கூஷ் மலை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது. அப்போது தட்சசீலத்தை ஆண்ட மன்னரின் பெயர் "அம்பி". அலெக்சாண்டரை எதிர்க்க வீரம் இல்லாததாலும், தனக்கு ஏற்கனவே ஏழாம் பொருத்தமாய் இருந்த இன்னொரு மன்னனை வீழ்த்த "துரோகி"யாய் மாறுகிறான். வரலாற்றில் பதிவு செய்ததில் இந்தியாவில் அயல் நாட்டவருக்காக செய்த முதல் துரோகம் இது.  போரிடாமல் கதவை திறந்து விட்டான். படை மேலும் இந்தியாவிற்குள் நுழைந்தது. அடுத்ததாக அலெக்சாண்டர் கண் முன் இருந்தது "பௌரிய ராஜ்ஜியம் ". இதன் அரசர் புருசோத்தமன். ஆங்கிலத்திலும், கிரேக்கத்திலும் சுருக்கமாக போரஸ் (Porus)  என்று அழைக்கப்படுவார். இவர் சந்திர குல மன்னர் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
                                அலெக்சாண்டரோ, இது ஏதோ ஒரு குறு நில மன்னன், எளிமையாக வென்று விடலாம் என நினைத்து போர் களத்திற்கு வந்தார். ஆனால் சற்று நேரத்தில் நிலம் அதிர்ந்தது. நிலநடுக்கமா என பல கிரேக்க படையினர் அச்சமடைந்தனர். ஆனால் உண்மையில் அதை விட மிகப் பெரிய ஆபத்து வந்தது. மாபெரும் சப்தமிட்டு, பிளறிக் கொண்டு, தந்தங்களோடு, ஒரு மிகப் பெரிய மிருகம்,  அதன் மேல் போர் வீரர்கள்.  ஆம். அது நம் யானைப் படை.  யானையை பார்த்திராத அவர்கள், அதுவும் போர்க்களத்தில் நூற்றுக்கணக்கான யானைகளை பார்த்ததும் சிதைந்து போயினர். யானையின் பிளறல் சப்தத்தில் அவர்கள் குதிரை பயந்து ஓடியது.  முதலில் புருசோத்தமன் கை ஓங்குகிறது. ஆனால் இவரின் போர் வியூகத்தை உணர்ந்து கொண்டு அலெக்சாண்டர் போரிட்டு புருசோத்தமனை வெற்றி கொள்கிறார். ஆனால் இவரின் வீரத்தை கண்டு வியந்த அலெக்சாண்டர், இவர் நாட்டை இவரிடமே ஒப்படைத்து விட்டு, கிரேக்கத்தை நோக்கி திரும்பி சென்றார். இது வரலாறு.

யார் கூறிய வரலாறு?

அலெக்சாண்டரை பற்றி எழுதிய கிரேக்க ஆசிரியர்கள் கூறிய வரலாறு.  அவர்கள் மன்னனின் முடிவு கௌரவமாக இருக்க வேண்டும் என இப்படி வரலாறை மாற்றினர்.

"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே" என்ற வசனம் நினைவில் வரலாம். ஆனால் உண்மையில் அலெக்சாண்டர், மன்னர் புருசோத்தமனிடம் தோற்றார். அலெக்சாண்டரின் முடிவு, அதாவது தோல்வியையே சந்திக்காத கிரேக்க மன்னரின் முடிவை கிரேக்க ஆசிரியர்கள் கௌரவமாக மாற்றி அமைத்தனர் என்பதற்கு வரலாற்றில் பதிவு செய்ய பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில காரணங்களை கூறுகிறேன். வாசகர்களே உண்மையான வரலாறு எதுவாக இருக்கும் என நிர்ணயம் செய்யலாம்.
           1. அலெக்சாண்டர் வென்ற இடத்தில் எல்லாம் தனது பிரதிநிதிகளையே ஆட்சி செய்ய வைத்தாரே தவிர, அதே மன்னனிடம் ஆட்சியை கொடுத்ததில்லை என்ற போது,  புருசோத்தமனிடம் மட்டும் ஒப்படைத்ததின் காரணம் என்ன?
          2. உலகமே தனக்கு போதாது என்று கூறியவருக்கு, உலகத்தின் இறுதி பகுதி இது என்று நம்பியவர், மேலும் முன்னேறி வராதது ஏன்?
         3. அவர் படை வீரர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் அலெக்சாண்டர் திரும்பி சென்றார் என்று சிலர் கூறுவதுண்டு. கிரேக்கத்தில் மற்ற நாடுகள், ஒட்டு மொத்த பாரசீகம், எகிப்து, ஆப்கானிஸ்தான், கடினமான இமயமலை தொடரை கடக்கும் போது, வீரர்களுக்கு வராத இந்த எண்ணம், இந்தியாவில் வெற்றி பெற்ற களிப்பில் இருக்கும் போது  வந்தது என்று சொன்னால் அது ஏற்கும் படியாக இல்லை.
           4. திரும்பி செல்லும் வழியிலேயே ஒரு வைரஸ் கிருமியால் இறந்து விட்டாராம். இத்தனை ஆண்டுகள் போர் செய்த போது,  இருந்த மருத்துவ குழு இப்போது எங்கே சென்றது. அப்படி மிக பயங்கர வைரஸ் என்றால்,  அது தொற்றி மற்ற வீரர்களும் இறந்திருக்க வேண்டுமே?

                   அலெக்சாண்டர் ஒரு மாவீரன் என்பதில் என்பதில் மாற்று கருத்து இல்லை. 14 வயதில் போர் வீரனாய்,  18 வயதில் தளபதியாய், 20 வயதில் அரசனாய், 32 வயதில் முக்கால் வாசி உலகத்தை கைப்பற்றிய மாவீரன் அவர்.  அதனால் அவர் இன்றும் "The Great" என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் தோல்வியையே சந்திக்க வில்லை,  மன்னர் போரஸை வென்றார் என்பதை என்னால் ஏற்க முடியாது.
               
                    போரில் அலெக்சாண்டர்,  மன்னர் புருசோத்தமனிடம் தோற்று விட்டார். ஆனால் அலெக்சாண்டரை கொலை செய்யாமல் அவர் தாய் நாட்டிற்கு வழியனுப்பி வைத்தார். இந்திய மன்னர்களிடம் இந்த "பெருந்தன்மை" யை  இனி வரும் அத்தியாயங்களிலும் பார்க்கலாம். திரும்பி செல்லும் வழியில் போரினால் ஏற்பட்ட காயம் தொற்றாக மாறி அவர் இறந்திருப்பார். ஆனால் திரும்பிச் செல்லும் போது வேட்டையாடும் போது விலங்குகள் தாக்கி காயம் ஏற்பட்டு, அதனால் உயிரிழந்தார் எனவும்,  மன்னர் புருசோத்தமனிடம் தோற்ற மன உழைச்சலாலேயே அவர் செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

                   பின்னாளில் அலெக்சாண்டரின் படைத்தளபதி மீண்டும் படை திரட்டி வந்து, சந்திரகுப்த மௌரியரிடம் தோற்று போனது தனி வரலாறு.
    

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

Benefits of Income Tax Return Filing

UDYAM - Whether a boon or bane for MSMEs