இந்தியாவின் கதை : ஹூமாயூன்
பாபர் என்ற புலி எட்டு அடி பாயும் போது, ஹூமாயூன் என்ற குட்டி பதினாறு அடி பாயும் என்றே எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த குட்டி ஒரு அடி தாண்டுவதற்குள்ளேயே தடுக்கி விழுந்தது. மொகலாய சாம்ராஜ்யத்தின் மிகவும் பரிதாபமான மன்னராக வரலாறு காண்பிப்பது இவரைத்தான். பாபர் விட்டுச்சென்ற அஸ்திவாரத்தின் மீது கோட்டை எழுப்ப தெரியாமல் தடுமாறினார். ஹூமாயூன் வீரம் மிக்கவர் தான், திறமையானவர் தான். இருப்பினும் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வதற்கு அதைத் தவிர பல்வேறு திறமைகள் வேண்டும். அதுதான் இல்லாமல் போனது. விஷ பாம்புகளுக்கும் பால் வார்க்கும் இரக்க குணம் கொண்டவர். ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் வேளையில் அதை விட்டுவிட்டு, "வெற்றி" என்ற வார்த்தை காதில் கேட்ட உடனேயே கொண்டாட ஆரம்பித்து விடுவார். கூடவே மூடநம்பிக்கையும் தொற்றிக்கொண்டது. நாள், கிழமைக்கு ஏற்றவாறு உடை அணிவது, உணவு உண்பது, இதைத்தாண்டி ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆஸ்தான மண்டபம் கட்டி அந்தந்த நாளில் அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
ஹூமாயூன் தன் வாழ்நாளில் மூன்று திசைகளிலிருந்து மிக அதிக அளவில் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. மால்வா மற்றும் குஜராத் பகுதிகளை ஆண்டு வந்த பகதூர்ஷா என்ற மன்னரை வழிக்கு கொண்டு வருவதற்குள் பாபர் இறந்து விட, பகதூர்ஷா பெரும் படையை திரட்டிக் கொண்டு ஹூமாயூனுக்கு எதிராக கிளம்ப, மற்றொரு பக்கம் டெல்லியில் மீண்டும் ஆப்கானிய கொடியை பறக்க செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு ஷெர்கான் என்ற வீரரும் அவருடைய ஆப்கானிய படையும் வர, மற்றொரு பக்கம் தோளுக்கு தோளாய் நிற்கவேண்டிய உடன்பிறந்த தம்பிகளே தனக்கு எதிராக துரோகம் செய்ய, என இப்படி எதிரிகளையும் துரோகிகளையும் ஒருசேர சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் அந்த மேன்மை தங்கிய சுல்தான். வாசகர்கள் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஹூமாயூன் பல நேரங்களில் செயலற்று இருந்தாலும் அவரது தலைமையின் கீழ், பாபரிடம் பயிற்சி பெற்ற வீரமிகு மொகலாயப் படை உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
காபூலை நிர்வகித்து வந்த சுல்தானின் சகோதரரான காம்ரான், ஹுமாயூனின் அனுமதி இல்லாமல் பெஷாவர் மற்றும் லாகூரை கைப்பற்றினார். அவரை தண்டிக்க வேண்டிய சுல்தான் இலகிய மனதுடன் அதையும் நீயே கவனித்துக் கொள் என்று கூறிவிட்டார். அண்ணனுக்கு போலியாக நன்றி சொல்லி சில மாதங்களில் பஞ்சாப் பையும் கைப்பற்றினார். அப்போதும் சுல்தான் புன்னகையுடன் கடந்து சென்றார். கடந்தகால சுல்தான் இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி ஜான்பூரைக் கைப்பற்ற படையுடன் வரும்போது முகலாயப் படை அவரைத் தடுத்தது. ஆனால் முழுவதுமாக முடிவதற்குள் ஹூமாயூன் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். விளைவு மிக பயங்கரமாக இருந்தது மயக்கத்தில் இருந்த சுல்தானை எழுப்பியபோது ஒரு பெரும் செய்தி காத்திருந்தது குஜராத் மன்னர் பகதூர்ஷா ராஜஸ்தானில் நுழைந்து சித்தூரை முற்றுகையிடுகிறார் என்று கூற, சுதாரித்துக்கொண்ட ஹூமாயூன் படைதிரட்டி சென்றார். ஆனால் போகும் வழியில் என்ன அவசரம்? என்று குவாலியரில் உள்ள மங்கைகளின் அழகில் மயங்கி சற்று காலம் அங்கு தங்கியிருந்தார். மீண்டும் பகதூர்ஷா வை நோக்கி செல்லும்போது அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்து மன்னர்களுக்கு எதிரான யுத்தத்தில் தான் இருக்கும் போது சுல்தான் என்னை தாக்குவதா? என்று கேட்டு எழுதி இருந்தார். உடனே மனம் மாறிய சுல்தான், தாக்குதலை கைவிட்டார். ஆனால் அந்தக் கோட்டைக்குள்ளும் பாசறைகள் அமைத்து, போருக்கு தயாராகி சுல்தான் பக்கம் திரும்பினார். ஆனால் இந்தமுறை சுதாரித்துக்கொண்ட ஹூமாயூன் குஜராத் மன்னரை துரத்திச் சென்றார் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமனில் காலூன்றிய நேரம் இது. போர்ச்சுகீசியர்களின் உதவியை பகதூர்ஷா நாடினார். ஆனால் வடக்கே ஆப்கானிய ஷெர்கான் எழுப்பிய போர் முரசு கேட்டு, பகதூர்ஷா வை பாதியில் விட்டு விட்டு டெல்லி திரும்பினார் ஹுமாயூன். இதன் விளைவாக பகதூர்ஷா போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் இழந்த அனைத்து நகரத்தையும் மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். இருப்பினும் விதி அவருக்கு வேறு மாதிரியாக முடிவை எழுதி வைத்திருந்தது. பெற்ற வெற்றியைக் கொண்டாட போர்ச்சுகீசியர்கள் நடுக்கடலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரையில் இருந்து ஒரு சிறிய படகில் நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏற, பகதூர்ஷா சென்ற போது இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில், பகதூர்ஷா உயிரிழந்தார். ஹுமாயூன் செய்ய தவறியதை இயற்கை செய்து முடித்தது.
இதற்குள் தெற்கு பீகார் முழுவதும் கைப்பற்றியிருந்த ஷெர்கான், வடக்கே முன்னேறி கங்கை நதிக்கரை வரை கைப்பற்றி இருந்தார். எதிர் தாக்குதலுக்கு ஹுமாயூன் தயாராகும்போது, இந்த பகுதிகளை நிர்வகிக்க ஏதோ ஒரு பிரதிநிதியை தானே நியமிக்க போகிறீர்கள்? அது ஏன் நானாக இருக்கக் கூடாது? என்று சுல்தானுக்கு விசுவாசமாக ஒரு கடிதம் எழுத, அதையும் நம்பினார் ஹூமாயூன். ஆனால் சிறு கால இடைவெளியிலேயே வங்காளத்தை கைப்பற்றினார் ஷெர்கான். உடனே கோபமடைந்த ஹூமாயூன் படையுடன் கிளம்ப, மீண்டும் ஷெர்கானிடம் இருந்து கடிதம் வந்தது. நான் உங்கள் ஊழியன், இந்த பகுதியையும் தன்னையே நிர்வகிக்க அனுமதித்தால் இவ்வளவு கப்பம் கட்டுவேன் என்று கூற, அதையும் நம்பிய ஹூமாயூன் படையெடுக்காமல் திரும்பினார். ஆனால் மீண்டும் அதை மீறி காசி மற்றும் கன்னோசியைக் கைப்பற்றியது ஷெர்கானின் ஆப்கான் படை. தற்போது தான் உண்மையை உணர்ந்த ஹூமாயூன், வங்காளம் நோக்கி படையுடன் செல்லும் போது, ஒரு தர்மசங்கடமான செய்தி வந்தது. ஹூமாயூனின் சகோதரர் ஹிண்டால் தன்னைத் தானே டெல்லி பாதுஷா வாக அறிவித்துக்கொண்டது தான் அது. இதைக் கேட்ட மற்றோரு சகோதரரான காம்ரான் நான் தான் பாதுஷா என்று மற்றொரு படையுடன் வர, ஹூமாயூன் திகைத்து நின்றார். சகோதரர்களுக்கு கடிதம் எழுதி விட்டு, ஷெர்கானை விட்டு விட்டு டெல்லி திரும்பினார்.
ஆனால் அது மழைக்காலம். கங்கை நதியை ஓர் மழை இரவில் மொகலாய படை கடக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கான் படை பின்னால் இருந்து தாக்கி குதறியது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொகாலாய வீரர்கள் இதில் பலியாயினர். எவ்வாறோ சமாளித்துக் கொண்டு, டெல்லி திரும்பியது படை. ஷெர்கானிடம் அண்ணன் தோற்ற பிறகு, டெல்லி அரியணையில் அமர போவது யார் என்று நாம் முடிவு செய்து கொள்வோம் என, காம்ரானும் ஹிண்டாலும் ஒப்புக் கொண்டனர். ஆதலால் அண்ணன் ஹூமாயூன் வந்ததும் பவ்வியமாக மன்னிப்பு கேட்டு மன்றாடினர். அதையும் பெருந்தன்மையுடன் மன்னித்தார் ஹூமாயூன். துரோகிகளை முதுகுக்கு பின் வைத்துக் கொண்டு, எதிரில் வரும் ஆப்கானிய எதிரி ஷெர்கானை எதிர் கொள்ள தயாராகிறார் ஹுமாயூன்.
மாபெரும் மொகலாயப் படையை எதிர்கொள்ள வந்து கொண்டிருக்கும் இந்த ஆப்கானிய வீரரைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கி.பி.1486 இல் டெல்லி அருகே ஒரு கிராமத்தில் பிறந்த ஷெர்கானின் இயற்பெயர் ஃபரீத். ஒரு குதிரை வியாபாரி வம்சத்தில் பிறந்த ஃபரீத், சிறு வயதிலேயே பல மொழிகளை கற்பது, வால் வீச்சு, குதிரையேற்றம், தன் தந்தையின் நிலத்தை நிர்வகித்து விவசாயம் செய்வது, கவிதை எழுதுவது போன்ற பல கலைகளைக் கற்றார். பாபர் ஆட்சிக் வந்தவுடன் மொகலாயப் படையில் இனைந்து தளபதியாக வரை பதவி உயர்வு பெற்றார். மொகலாயர்களின் போர்த் தந்திரம் பற்றி தெரிந்துக் கொள்ளவே இவை அனைத்தும். மொகலாயர்களை விரட்டி, டெல்லியில் ஆப்கான் கொடியைப் பறக்க விட வேண்டும் என்பது ஷெர்கானின் அளப்பறியா கனவு. அதை நிறைவேற்றும் வகையில் தற்போது ஆப்கான் படையும், மொகலாய படையும் மோத இருக்கிறது. இந்த சோதனையான நேரத்தில் ஹூமாயூனின் மன உளைச்சலை அதிகப்படுத்தியது, சகோதரரான காம்ரானின் துரோகம். பன்னிரண்டாயிரம் குதிரைப்படை வீரர்கள் கொண்ட படையை அண்ணணுக்கு அனுப்பாமல் துரோகம் செய்தார். சகோதரர்கள் இனையவில்லை என்ற தகவல் பரவியதும், படைக்குள் குழப்பம் ஏற்பட்டு, சில தளபதிகளும், பல வீரர்களும் நழுவினர். விளைவு - ஷெர்கான் போரில் வென்று டெல்லி கோட்டையில் ஆப்கானியக் கொடி ஏற்றப்பட்டது. ஹூமாயூன் தோற்ற செய்தி அறிந்தவுடன் ஆக்ராவில் உள்ள அனைத்து கிராமங்களின் கதவுகளும் அடைக்கப்பட்டன. ஹூமாயூன் மற்றும் அவருடன் இருந்த எஞ்சிய சிறு படையும் உணவு, தண்ணீர் இன்றி அலைந்தது. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் டெல்லியிலிருந்து லாகூர் வரை உங்கள் எல்லையை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஹூமாயூன், ஷெர்கானுக்குக் கடிதம் எழுத, நீங்கள் காபூலில் இருந்து வந்தவர் அங்கேயே மீண்டும் செல்லுங்கள் என்று பதில் வந்தது மீண்டும் இருக்க இடமின்றி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார் ஹூமாயூன். இதற்குள் காம்ரான், ஷெர்கானிடம் பேரம் பேச முயல, அதற்கு மிக்க நன்றி அண்ணனுக்கு துரோகம் செய்யும் துரோகியின் உதவி எனக்கு தேவையில்லை என்று பதில் அனுப்பினார் அந்த ஆப்கானிய வீரர். ஆப்கானிய படையை சமாளிக்க அப்போது சிந்து மாகாணத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னரிடம் உதவி கோரினார் ஹூமாயூன் ஆனால் டெல்லியை எதிர்க்க இந்த சிறிய படையை நம்பி களம் இறங்க சிந்து மாகாணம் மன்னர் சம்மதிக்கவில்லை 18 மாதங்களாக அங்குமிங்குமாகச் சுற்றித் திரிந்தது மொகலாயப் படை. இருக்க இடமின்றி உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி அலைந்து திரிந்தது பாபர் பாதுஷா வளர்த்த படை. ஆனால் துன்பத்திலும் ஒரு இன்பமாக ஒரு சம்பவம் நடந்தது அதுதான் ஹூமாயூனின் திருமணம். ஹமீதா என்ற பெண்ணை பார்த்தவுடன் காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் ஆனால் உண்மையில் இவருக்கு முன்பே இவரது சகோதரர் ஹிண்டாலுக்கு ஹிமிதா மேல் ஓர் ஈர்ப்பு இருந்தது என்றும் தம்பிக்கு முன் அண்ணன் முந்திக் கொண்டார் என்றும் ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த திருமணம் நடந்தவுடன் சகோதரர் ஹிண்டாலும், ஹூமாயூனை விட்டு, தன் படையை அழைத்துச் சென்றார். மேலும் தனிமையானார் ஹூமாயூன். மற்ற அனைத்துப் பிரச்சனைகளையும் மறந்து சுமார் ஆறு மாதம் இல்லற வாழ்வின் சுவையை அனுபவித்தார். கி.பி.1542 மே மாதத்தில் ஓர் ராஜபுத்திர மன்னரிடம் இருந்து ஹூமாயூனுக்கு அழைப்பு வந்தது. ஷெர்கானைத் தான் அடக்க விரும்புவதாகவும், அதற்கு ஹூமாயூனின் உதவி தேவை என்றும் கடிதம் குறிப்பிட்டிருந்தது. இந்த அழைப்பை நம்பிய ஹுமாயூன், தன் படையுடன் கர்ப்பினி மனைவியையும் அழைத்துச் சென்றார். ராஜஸ்தான் பாலைவனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அந்த துரோக தகவல் வந்தது. ராஜபுத்திர மன்னரும் ஷெர்கானும் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். விருந்தாளியாக வரும் மொகலாயர்களை கைது செய்ய வேண்டும் என்பதை அறிந்த ஹூமாயூன் மீண்டும் பாலைவனத்தில் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை வந்தது. துரோகத்தை சகித்து வாழ்ந்தால் என்ன நிலை வரும் என்பதை ஹூமாயூன் அப்போது கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு சம்பவம் நடந்தது. ஹூமாயூனின் மனைவிக்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கிறது என்று கூற திகைத்துப் போனார் ஹூமாயூன். தண்ணீரே இல்லாத இடத்தில் மாதுளைக்கு எங்கே போவது என்று தினறினார் பாதுஷா. ஆனால் சிறிது நேரத்திலேயே ஒட்டகத்தில் வந்த ஒரு வணிகரிடம் மாதுளம் பழம் இருந்தது. இப்போதே உன் வயிற்றில் இருக்கும் குழந்தை கேட்டவுடன் பழம் கிடைத்துவிட்டது. யார் அந்த குழந்தை? என்று மகிழ்ச்சியாக கேட்டார் ஹூமாயூன். சில நாள் பயணத்திற்குப் பிறகு அமர் கோட் எனும் சிறிய ஊருக்கு தஞ்சமடைந்தது முகலாயப் படை அவர்களை ராணா பிரதாப் என்ற குறுநில மன்னர் அன்போடு வரவேற்று அடைக்கலம் கொடுத்தார் கிபி 1542 அக்டோபர் 15 அன்று 15 வயதான ஹமீதா ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் தன் கவலைகளை எல்லாம் மறந்து இன்பத்தில் மூழ்கிய ஹூமாயூன், "அக்பர்" என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டார்.
இந்தியா கைநழுவிப்போன பிறகாவது சகோதரர்களின் பகை விலகும் என ஹூமாயூன் நம்பிக்கையுடன் சிந்து நதியை கடந்து காந்தகார் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து பிறகு தனது சொந்த மண்ணான முன்பு தந்தை பாபர் கோலோச்சிய காபூல் நகரம் செல்லலாம் என்பது திட்டம். ஆனால் வந்த செய்தி ஹூமாயூனின் நம்பிக்கையை உருக்குலையச் செய்தது. காபூல் நகரை நிர்வகித்து வந்த காம்ரான், அஸ்காரி எனும் தளபதியின் கீழ் ஹுமாயூனைக் கைது செய்யப் படையை அனுப்பியதாகச் செய்தி வந்தது. சகோதரனோடு சமாதானப் பேச்சு வார்த்தை கூட நடத்தமுடியாமல் வேறு வழியில்லாமல் மனைவி ஹமீதாவையும் விசுவாசமான நாற்பது வீரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு பாரசீகம் நோக்கி புறப்பட்டார் ஹூமாயூன். ஆனால் செல்லும் வழியில் டிசம்பர் மாதக் குளிரில் பணி மலையைத் தாண்டி 15 மாத வயது கொண்ட குழந்தை அக்பரால் வர முடியாது என்பதால் அக்பரை மட்டும் செவிலியர்களிடம் ஒப்படைத்துவிட்டு பாரசீகம் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
ஜனவரி, 1544 இல் பாரசீக எல்லைக்குள் நுழைந்த ஹுமாயூனுக்கு சற்று நம்பிக்கையும், நிம்மதியும் கிடைத்தது. பாரசீக மன்னர் ஷா, ஹூமாயூனை கோலாகலமாக வரவேற்றார். பதவியிழந்த டெல்லி மன்னர் ஹுமாயூன் தங்கி ஓய்வெடுக்க ஒரு மாளிகையும் தயாராக இருந்தது. சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்த ஹூமாயூன், பிறகு மன்னரைச் சந்தித்து நன்றி செலுத்தும் விதமாக தன்னிடமிருந்த கோஹினூர் வைரத்தைக் கொடுத்தார். ஆனால் பாரசீக மன்னரின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. ஷியா பிரிவைச் சார்ந்த பாரசீக மன்னர் சன்னி பிரிவைச் சார்ந்த ஹூமாயூன் தன்னுடைய பிரிவான ஷியா பிரிவிற்கு மாற வேண்டும் என்று மிரட்டல் கலந்த வேண்டுகோள் வைத்தார் பாரசீகத்தில் தந்தை பாபருக்கு ஏற்பட்ட அதே தர்மசங்கடம் மகனுக்கும் நிகழ்கிறது வேறுவழியின்றி ஹூமாயூனும் அதை ஏற்றுக் கொண்டார். ஷாவும் ஹுமாயூனும் இனைந்த செய்தி கேட்டு திகைத்துப்போன காம்ரான், ஹூமாயூனை ஒப்படைத்தால் காந்தகார் நகரம் உங்களுக்கு என பாரசீக மன்னருக்கு தூது அனுப்பினார். காந்தகார் நகரின் மீது பாரசீக மன்னருக்கு இருந்த ஆசை காரணமாக தற்போது அவரது மனம் சஞ்சலம் அடைந்தது. ஆனால் அவரது தங்கை காம்ரானின் வலையில் அண்ணன் விழாமல் தடுத்து விட்டார்.
12,000 குதிரை வீரர்களை கொடுத்து, காந்தகார் நகரை மீட்டு தனது மகன் முராத் தை அரியணையில் அமர வைக்கும்படி ஹுமாயூனுக்கு வேண்டுகோள் வைத்தார் ஷா. பாரசீக படையுடன் ஹுமாயூன் வருவதை அறிந்த அஸ்காரி தப்பிச் சென்றுவிட, மீதமிருந்த படைவீரர்கள் ஹூமாயூனுடன் இணைந்து கொள்ள, காந்தகார் நகரம் எளிமையாக வீழ்ந்தது. ஏற்றுக் கொண்டபடி ஷாவின் மகனை அரியணையில் அமர்த்தினார் ஹுமாயூன். ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்த சில நாட்களிலேயே முராத் ஒரு கடுமையான காய்ச்சலில் விழுந்து இறந்து போனார். நிலைமையை சுதாரித்துக்கொண்ட ஹூமாயூன், ஷியா பிரிவு உடைகளைக் களைந்து விட்டு தனது பழைய அடையாளத்துடன் முகலாய வீரர்களின் உதவியுடன் காந்தகார் நகரில் சுதந்திர மன்னராக முடிசூட்டிக் கொண்டார். பாரசீக மன்னர் ஷா வின் விசுவாசமான தளபதிகள் இரவோடு இரவாக கொல்லப்பட்டனர். இது பாரசீக மன்னருக்கு செய்த துரோகம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.
நல்ல வேலையாக கொண்டாட்டம் என ஆரம்பிக்காமல் காபூல் நகரம் நோக்கி படையை திருப்பினார் ஹூமாயூன். காம்ரான் மீது வெறுப்பில் இருந்த படைத்தளபதிகள் வீரர்கள் என அனைவரும் ஹூமாயூன் படையுடன் இணைந்துகொள்ள யுத்தமே இல்லாமல் காபூல் நகரை கைப்பற்றினார் ஹூமாயூன். ஒரு சில வீரர்களுடன் ஊரை விட்டு தப்பிச் சென்றார் காம்ரான். இதையடுத்து குழந்தை அக்பர் மீண்டும் பெற்றோரிடமே 1545-ல் நவம்பர் மாதத்தில் இனைந்தது. அண்ணனை ஒழித்துக்கட்ட டெல்லிக்குச் சென்று டெல்லி பாதுஷா இஸ்லாம் ஷா விடம் உதவி கேட்டார் காம்ரான். ஆனால் டெல்லி பாதுஷா சம்மதிக்கவில்லை. அதையடுத்து பஞ்சாப் மன்னரிடம் உதவி கேட்க, ஆனால் அவரோ காம்ரானை கைதுசெய்து ஹூமாயூனிடம் ஒப்படைத்தார். கை, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்ட தம்பி காம்ரானை கண்டதும் ஹூமாயூனின் மனது சற்று இளகியது. தம்பியை விடுவித்து தன்னுடன் அழைத்து விருந்து வைத்தார். ஆனாலும் சற்று பயத்திலேயே காம்ரான் இருந்தார். ஹூமாயூனுக்கு நெருக்கமானவர்கள், இந்த முறை தம்பிக்கு இறக்கம் காட்டக்கூடாது. உங்கள் தனிப்பட்ட விருப்பத்தால் எத்தனை ஆண்டுகள் உங்களுடன் நாங்களும், இந்த நாடும் பட்ட கஷ்டத்தை எண்ணிப்பாருங்கள் என்று கூற, சிந்திக்க ஆரம்பித்தார் ஹூமாயூன். சிறிது நேரம் கழித்து என் தந்தைக்கு வாக்களித்ததால் என் தம்பியை என்னால் கொல்ல உத்தரவிட முடியாது. ஆனால் அவனது கண்களை மட்டும் பறித்து விடுங்கள் அதுவும் அவனுக்கு வழிக்காமல் என்று உத்தரவிட்டு திரும்பியதும் அவரது கண்கள் கலங்கின. ஹூமாயூனின் நம்பிக்கைக்குரிய வீரர்கள் தண்டனையைக் கட்சிதமாக நிறைவேற்றினர். பின்னர் தம்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து ஹஜ் புனித யாத்திரை அனுப்பி வைத்தார்.
1544-ல் டெல்லியில் பாதுஷா இஸ்லாம் ஷா இறக்க, மூன்று பேர் நான் தான் வாரிசு என்று வாரிசு சண்டையில் இறங்க, காலம் ஹூமாயூனைப் பார்த்து புன்னகைத்தது. பைராம்கான் என்ற திறமைவாய்ந்த தளபதியின் கீழ் முகலாயப் படை டெல்லி நோக்கி செல்கிறது பின்னாளில் அக்பருக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டவரும் இதே பைராம்கான் தான். தான்தான் வாரிசு என்று சொல்லிக்கொண்டிருந்த மூவர்களில் ஒருவரான சிக்கந்தர் ஷா முகலாய படையுடன் மோதி தோற்றார். மீதம் இருந்த இருவர் அடையாளம் தெரியாமல் ஓடி விட்டனர். மிக எளிமையாக முகலாயப் படை மீண்டும் டெல்லிக்கு நுழைந்தது அதுவும் சுதந்திரமாக. ஹூமாயூனைக் கண்டதும் டெல்லி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஜூலை 23, 1555 இல் டெல்லி அரியணையில் அமர்ந்தார் ஹூமாயூன். ஆனால் அவரது ஆட்சி ஆறு மாதம்தான் நிலைத்தது. ஜோதிடத்திலும் வானியலிலும் ஆர்வம் நிறைந்த ஹூமாயூன் அப்போ பொழுது மாடியிலிருந்து நட்சத்திரங்களை கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி ஒரு நாள் ஜனவரி 24, 1556 அன்று, உச்சியில் இருந்து கீழே இறங்கி வரும் நிலையில், தொழுகைக்கான ஒலி ஒலித்ததும், திரும்பி மேலே செல்ல முயன்ற போது கால் இடரி செங்குத்தாக கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார். வாழ்க்கையில் தொடர்ந்து பலமுறை தடுக்கி விழுந்து கொண்டிருந்த ஹூமாயூன் கடைசியில் அதே ரீதியில் தன் வாழ்வை முடித்துக் கொண்டது ஒரு விசித்திரமான பரிதாபமான முற்றுப்புள்ளி.
Comments