இந்தியாவின் கதை : பல காமெடியன்களும் தைமூர் என்ற அரக்கனும்
கி.பி. 1388 செப்டம்பர் 20 அன்று சுல்தான் பிரோஸ் துக்ளக் இறந்த பிறகு அரியணை ஏறியவர்களின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரவுவதற்கு முன் அவர்கள் காணாமல் போயினர். அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற ஒரு தகுதியை தவிர, நாட்டை ஆள்வதற்கு என தகுதிகள் ஏதும் இல்லை. சுல்தான் பிரோஸ் துக்ளக் இறந்த பிறகு டெல்லி சுல்தான்களின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்தது. சுல்தான் மறைவுக்குப் பிறகு அவரது பேரன் துக்ளக் ஷா அரியணையில் அமர்ந்தார். அரண்மனையை ஒரு ஜாலியான “கிளப்” போல நடத்தி, ஐந்தே மாதங்களில் அமைச்சர்களால் பரலோகம் அனுப்பப்பட்டார். பிறகு இன்னொரு பேரன் அபூபக்கருக்கு அமைச்சர்கள் மணி மகுடம் சூட்டினார். தன் ஆண்டுவிழாவை கூட காணாத அபூபக்கர் தன் சொந்த மாமாவான முகமதுவிடம் அரியணையை பறிகொடுத்தார். நான்கு ஆண்டுகள் ஆட்சி என்ற பெயரில் மக்களை வெறுப்பேற்றி, பிறகு தன் மகனான மகமது ஷா என்பவரை ஆட்சியில் அமர்த்தினார். இவர் சட்டையை பிடித்து நான்தான் டெல்லி சுல்தான் என மல்லு கட்டினார் இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் நஸ்ரத் ஷா. இவர்கள் இருவரும் தாங்கள் தான் டெல்லி சுல்தான் என பிரகடன படுத்திக்கொண்டு டெல்லியின் வெவ்வேறு பகுதியிலிருந்து ஆட்சி செய்து காமெடி செய்துவந்தனர். இதையெல்லாம் பார்த்து சுயநலம் மிக்க பிரபுக்கள் கூட்டம் குளிர் காய்ந்து வந்தது. ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இவ்வாறு ஓட, உண்மையான அரக்கன் இந்தியாவின் வாசலை தட்டினான். அந்த அரக்கனின் பெயர் தைமூர், அவன் இந்தியா வந்த தேதி கி.பி. 1398 செப்டம்பர் 22.
வடக்கிலிருந்து இந்தியாவிற்குள் வரவேண்டுமென்றால் விண்ணை முட்டும் இமயமலைத் தொடரை கடக்கவேண்டும், அல்லது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதியை கடக்க வேண்டும். இது இயற்கை நமக்கு அமைத்துக் கொடுத்த அரண். இதை வெற்றியோடு கடந்தவர்கள் ஒரு சிலரே. கிரேக்க மன்னர் அலெக்சாந்தருக்கு பிறகு கி.பி. 1221 இல் மங்கோலிய தலைவன் செங்கிஸ்கான் சிந்து நதி வரை வந்துவிட்டான். பிறகு இந்தியாவா? பாரசீகமா? என யோசித்து பாரசீகம் பக்கம் தன் குதிரைகளை திருப்பியதால் இந்தியா அப்போது தப்பித்தது. ஆனால் ஆபத்து கி.பி. 1398 இல் மீண்டும் வந்தது - தைமூர் உருவில்.ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு வடக்கில், முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடி எல்லையில், இன்றைய உஷ்பக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாமர்கண்ட் இதை தலைநகரமாகக் கொண்ட மங்கோலிய இனத்தின் தலைவன் தான் இந்த தைமூர். இவன் இந்தியாவில் தங்கியிருந்தது ஆறு மாதங்களே என்றாலும் பிற்காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் வலுவாக இந்தியாவில் தோன்றுவதற்கு முக்கிய காரணம் தைமூர் என்பதால் இவரை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். அங்கு அரியணை ஏறிய பின் தைமூர் தன் எல்லையை விரிவாக்கம் செய்ய முதலில் படையெடுத்தது பாக்தாத் நகரை நோக்கி. பிறகு பாரசீகம், அதை கபளீகரம் செய்துவிட்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரம். லட்சக்கணக்கான மனித தலைகளை வெட்டி எறிந்தனர் தைமூரின் வீரர்கள். பிறகு அவர்களின் இலக்காக அமைந்தது டெல்லி நகரம். தைமூர் தன் சிறு வயதில் இருந்தே டெல்லியை பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. மணலையும் வறட்சியையும் மட்டுமே பார்த்த அவர்களுக்கு இந்திய கோயில்களின் தங்கமும் வைரமும் சொர்க்கமாக தெரிந்தது. அதனால் தான் இந்தியா மீது இத்தனை அந்நியப் படையெடுப்புகள் நடந்தது. தண்ணீர் கரை புரண்டோடும் சிந்து நதியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை தைமூர். மாபெரும் படகுகளை வரிசையாக நிற்கவைத்து செயற்கையாக ஒரு பாலத்தை உருவாக்கினான் அதன்மீது அவனது படைகள் மின்னல் வேகத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தன. பஞ்சாப் பகுதி முழுவதையும் சூறையாடி வெறியாட்டம் போட்டது தைமூரின் படை. சுமார் ஒரு லட்சம் பேர் அடிமைகளாக தைமூர் வீரரிடம் சிக்கினர். தன் படையோடு அவர்களையும் கயிறு கட்டி இழுத்து வந்தது தைமூரின் படை. டிசம்பர் ஆரம்பம் டெல்லி நகரின் எல்லையில் முகாமிட்டிருந்த மங்கோலிய படையின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம். டெல்லி யோடு போர் புரிய இருக்கும் இந்த நேரத்தில் ஒரு லட்சம் அடிமைகளை உடன் வைத்திருப்பது நமக்கு தான் ஆபத்து இவர்கள் எதிரி படையோடு சேர்ந்தால் ஆபத்து இன்னும் அதிகமாகிவிடும் என்று சில தளபதிகள் தைமூரிடம் கூற, அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் தலைகள் வெட்டி வீழ்த்த ஆணையிடப்பட்டது.
மாபெரும் சிந்து நதி மற்றும் இமய மலைத்தொடர் தாண்டி இந்தியா மீது படையெடுத்த அனைத்து அண்ணிய மன்னர்களுக்கு திகிலூட்டிய மற்றொரு விஷயம் இந்தியர்களுக்கே உரித்தான “யானை படை” . எளிமையான ஒரு சிறிய இந்திய அரசரிடம் கூட பல யானைகள் இருக்கும் என்றும், அந்த யானைகள் கட்டுப்பாடும், ஆவேசமும் கொண்டு போர்புரியும் என்றும் அனைவரும் கேட்டதுண்டு. யானையையே நேரில் பார்த்திராத அவர்களுக்கு இது மிகவும் அச்சமூட்டும். தைமூருக்கும் அந்த பயம் இருந்ததில் ஆச்சரியமில்லை ஆனால் அது அவரை மிகவும் கலவரப்படுத்த இல்லை. இந்தியாவின் யானைப் படையை எதிர்க்க துணிந்தார் தைமூர். தைமூர் யார் என்ற விபரம் அறியாத டெல்லி படையும், சுல்தான் யாரென தெரியாத சுல்தானும் போருக்கு தயாராகினர். போர்க்களம் தயாரானது, மோதல் உறுதியானது. டிசம்பர் 17ஆம் தேதி டெல்லியின் கோட்டை கதவு திறந்தது. சுல்தானின் பத்தாயிரம் குதிரை வீரர்கள் 40000 காலாட்படை வீரர்கள் பிறகு தரை அதிர நடந்து வந்த யானைப் படை. இந்த யானை இவ்வளவு எடையை தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடி போர் புரிவதை கண்டு தைமூர் சில நொடிகள் அசந்து போனார். பிறகு தன் தலையை அசைக்க தைமூரின் திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டது. தைமூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குதிரைப்படை வீரர்கள் மட்டும் மிகுந்த துணிச்சலும் வேகமும் கொண்டு மின்னல் வேகத்தில் முன்னேறி டெல்லி சுல்தான் படைக்குள் நுழைந்தனர். உருண்டையான முட்கள் பதிக்கப்பட்ட ஒருவிதமான ஆயுதத்தை யானைப்படை வரும் வழியில் வீசினர். யானைகள் அதனை மிதித்து வலி தாங்க முடியாமல் கதறி தடுமாறியது. அதையும் தாண்டி முன்னேறி வந்த யானைகளை தைமூர் படை ஏற்கனவே குழிதோண்டி பதித்து வைத்திருந்த சூலாயுதம் பதம் பார்த்தன. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த குழப்பங்களால் டெல்லி படையின் குதிரைப்படை வீரர்களின் கவனம் சிதறியது இதை பயன்படுத்திக் கொண்ட தைமூரின் படை அவர்களை வெட்டி வீழ்த்தியது. அடுத்த திட்டமாக தைமூரின் ஒட்டகப் படையும் எருமை படையும் களமிறங்கியது. அவற்றின் முதுகில் பெரிய பெரிய மூட்டைகளில் வைக்கோல் அடைக்கப்பட்டிருந்தது. அவைகள் வேகமாக டெல்லி படையை நோக்கி ஓடும்போது தைமூர் படையின் வீரர்கள் அவற்றின்மீது நெருப்பை பற்ற வைத்தனர். ஏறத்தாழ ஒரு நெருப்பு அலைபோல் உருவாகி டெல்லி படையை சுருக்கியது. மாலை வேளை வருமுன் போர் ஓய்ந்து, வெற்றிக் களிப்புடன் தைமூர் டெல்லியில் நுழைந்தார்.
தைமூர் அரண்மனை சென்றபின் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், செல்வந்தர்கள்,
பிரபுக்கள் என அனைவரும் பரிசுப் பொருட்கள் கொடுத்து பச்சையாகவே
உயிர்ப்பிச்சை வேண்டினர். ஆனால் அவற்றின்மீது எல்லாம் கவனம் செலுத்த
தைமூரிடம் நேரமில்லை. தனக்குப் பிடித்த போல் வெட்ட வெளியில் சென்று கூடாரம் அமைத்து
அமர்ந்து சற்று ஓய்வு எடுத்தார். பின்னர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார்.
சரியாக என்ன நடந்தது என வரலாற்றில் இல்லை. திடீரென்று வீரன் ஒருவன் ஓடிவந்து
தைமூர் காதில் ஏதோ சொல்ல, முகம் சிவந்த தைமூர் டெல்லி மக்கள் அனைவரையும்
கொன்று குவிக்க ஆணையிட்டார். டெல்லியை விட்டு மக்கள் தப்பிக்க முடியாமல்
காவல் போட்டபின் ராணுவப்படை தன் வேட்டையை ஆரம்பித்தது. இரண்டு நாட்கள்
முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள செல்வத்தை கொள்ளையடித்து அங்கு
வாழ்ந்த மக்களை கொன்று குவித்தனர். பிறகு டெல்லி நகர் முழுவதும் தீயிட்டு
சாம்பலாக்கினார். டெல்லிக்கு வரும்போது பறவையின் வேகத்தைவிட அதிகமான
வேகத்தில் வந்த தைமூர் படை செல்லும்போது நத்தையின் வேகத்தைவிட மெதுவாக
சென்றது. காரணம், கொள்ளையடித்த செல்வங்களின் எடை. போரில் காயமில்லாமல்
சிறைபிடிக்கப்பட்ட 120 யானைகளையும் இந்தியாவின் சிறந்த கட்டிட கலை
வல்லுனர்கள், சிற்பிகளை தன்னுடன் தன் சொந்த நாட்டுக்கே வலுக்கட்டாயமாக
இழுத்து சென்றார். கொடுங்கோலர்களின் மரணமும் கொடூரமாக இருக்கும் என்பது
சரிதான். ஆனால் அது தைமூர் விஷயத்தில் பலிக்கவில்லை. சீனாவை கைப்பற்றும்
நோக்கில் இருந்தபோது கி.பி. 1405 ஜனவரியில் உறக்கத்திலேயே நிம்மதியாக
உயிரிழந்தார்.
Comments