இந்தியாவின் கதை : முடிவுரை

                                இந்தியாவை பந்தாடி விட்டு திரும்பி சென்ற நாதிர்ஷா எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு பாரசீக கொலையாளியின் தனிப்பட்ட குருவாளுக்கு பலியானார். அவர் விட்டு விட்டுப் போன அகமது ஷா அப்தாலி எனும் வீரர் 16 அடி பாய்ந்தார். நாதிர் ஷாவின் பிரதான தளபதிகளுள் ஒருவர் இந்த அகமது ஷா. எஜமானின் மறைவுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் காபுல் கந்தகார் உள்ளிட்ட பகுதிகளை வென்று ஆட்சி அமைத்தார் இந்த வீரர். ஏற்கனவே நாதிர்ஷாவுடன் டெல்லிக்கு வந்து குஷி கண்ட இந்த புலி தன் பங்குக்கு இந்திய மண் மீது குறி வைத்தது. 1748 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1761 வரை ஐந்து முறை இந்தியாவுக்கு படையெடுத்தார் ஆப்தாலி. 1748 இல் 12 ஆயிரம் வீரர்கள் அடங்கிய படையுடன் இந்தியாவில் நுழைந்த அவரை முகலாய பாதுஷா முகமது ஷாவின் வாரிசான அகமதுஷா படையெடுத்து அவரை சமாளித்து விரட்டி அடித்தார். 1750 இல் மறுபடியும் இந்திய எல்லைக்குள் நுழைந்த அப்தாலி, பஞ்சாப் பிரதேசத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார். அவரது அடுத்த படை எடுப்பில் காஷ்மீர் ஆப்கானியர் வசம் வீழ்ந்தது. 

                            முகமது ஷா இறந்த பிறகு தன் 22 ஆவது வயதில் அரியணை ஏறிய அகமதுஷா ஒடுக்க கேட்டின் மறு உருவமாக திகழ்ந்தார். அந்தப்புரத்திலேயே குடிகொண்டார். இதனால் அமைச்சர்களும் அரசவைப் பெரியவர்களும் மன்னரை காண முடியாமல் தவித்தனர். அதனால் அரசவைப் பெரியவர்கள் அதிரடி புரட்சிக்கு பச்சை கொடி காட்டினார்கள். இமாத் உல் முல்க் எனும் தளபதியின் கீழ் ஒரு சிறிய படை அந்த புரத்தில் நுழைந்து சல்லாபத்தில் இருந்த மன்னர் அகமது ஷாவை சிறைபிடித்து அவரது கண்களை குத்தி குருடாக்கினார்கள். தலையை சீவாமல் விட்டால் அதற்கு அடுத்தபடியான தண்டனையாக கண்களை நோண்டி குருடாக்குவது அந்த காலத்தில் வழக்கமாக இருந்தது. பார்வை இழந்தவர்களுக்கு என்ன திறமை இருப்பினும் அவர்கள் பதவிப் போரில் இறங்க மாட்டார்கள் என்பதால். 

                     இப்படி தன் ஒன்றுவிட்ட சகோதரரை சிறையில் தள்ளி விட்டு அரியணையில் அமர்ந்தவர் இரண்டாம் ஆலம்கீர். பெயருக்குத்தான் இவர் அரசர் நடந்தது என்னவோ தளபதி இமாத் உல் முல்க் ஆட்சி. இந்த தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிக் கொள்ள நினைத்த ஆலம் கீர் 1759 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் கொலையும் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார் இரண்டாம் ஷா ஆலம் இவரும் வெறும் பொம்மையே. இந்த நேரம் பார்த்து ஆப்கானிய ஆப்தாலி மறுபடி படையெடுக்க பதவி இழந்த ஷா ஆலம் 12 ஆண்டு காலம் நாடு இல்லாமல் பரதேசி போல் திரிந்தார். வலுவாக வளர்ந்திருந்த மராட்டியர்களின் உதவியை கூறினார். மனமிரங்கிய மராட்டியர்கள் இந்த பரிதாப பாதுஷாவை 1772 இல் டெல்லி அரியணையில் அமர்த்தினார்கள். 

                    காலத்தின் கோலம்....! ஷா ஆலம் மிகவும் பாவம். அரண்மனை காவல் அதிகாரி குலாம் காதிர் என்பவனால் பாதுஷாவுக்கு 1788 இல் நேர்ந்த கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் போய்விட்ட அரண்மனைக்குள் நிராதரவாக நடுங்கிக் கொண்டிருந்த பாதுஷாவை புரட்டி எடுத்து சித்திரவதை செய்தான் இந்த அதிகாரி. பாதுஷாவை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து கண்களை தோண்டி எடுத்து, உதைத்து, மிதித்து மேலும் இந்த மனித மிருகம் மன்னருக்கு நிகழ்த்திய கொடுமைகள் எழுத முடியாத அளவுக்கு கேவலமானவை. பாதுஷாவின் மகன்களுக்கும் இதே கதிதான். தர்பாரில் சவுக்கால் அடித்து அந்த சிறுவர்களை நடனமாட வைத்தான் இந்த கொடுங்கோலன். அரச குல பெண்களும் சொல்ல முடியாத அவமானங்களுக்கு உள்ளானார்கள். கடைசியில் ஒரு வழியாக உள்ளே புகுந்தது கிழக்கிந்திய கம்பெனி. பாதுஷாவை காப்பாற்றிய அவர்கள் மறைமுகமாக இந்தியாவை ஆட்சி செய்த ஆரம்பித்தனர். 1806 இல் ஷா ஆலம் இறக்க, அவர் மகன் இரண்டாம் அக்பர் ஷா அரியனையில் அமர்த்தப்பட்டார். இந்த காலகட்டத்தின் முகலாய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் அரண்மனையில் நான்கு சுவர்கள் மட்டுமே. வெளியே முழுமையான இந்தியாவும் கை மாறி விட்ட நிலையில் வறுமையில் வாடிய முகலாய சக்கரவர்த்திக்கு கிழக்கிந்திய கம்பெனி உதவித்தொகை அளித்து பின்னணியில் நாட்டை ஆண்டு வந்தது. 1837 அக்பர் ஷா இறந்தவுடன் ஆட்சிக்கு வந்த இரண்டாம் பகதூர் ஷா தான் முகலாய சாம்ராஜ்யத்தின் மிகக் கடைசி சக்கரவர்த்தி முகலாய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளியாக வந்த பாதுஷா பகதூர்ஷா மிகவும் மென்மையானவர். மிகச்சிறந்த கவிஞர். ஒருவேளை பேரரசர் அக்பருக்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்திருந்தால் பெருமைமிக்கதொரு சக்கரவர்த்தியாக திகழ்ந்திருக்க கூடும். வசதி ஏதும் இல்லாத சூழ்நிலையிலும் அரண்மனையை கூட்டி பெருக்க கூட ஆட்கள் இல்லாமல் குப்பை கூலங்களுடன் ஒட்டடை தோரணங்களுக்கு நடுவே பரிதாபமாக பாதுஷா என்ற பெயரில் வாழ்ந்து வந்தார் பகதூர்ஷா. மற்ற எந்த முகலாய மன்னர்களுக்கும் இல்லாத பெருமை இவருக்கு கிடைத்தது என்று கூறலாம். கேமராவில் புகைப்படம் எடுக்கப்பட்ட பெருமை இவருக்கு கிடைத்தது. 

              ஆண்டு 1857...! தங்கள் என்ஃபீல்டு துப்பாக்கிகளில் உபயோகப்படுத்தப்பட்ட கிரீஸில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பை பிரிட்டிஷ்காரர்கள் கலந்ததை அடுத்து வெகுண்டு போய் போராட்டத்தில் இறங்கினார்கள் இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள். இந்த சிப்பாய் கலகம் வெடித்ததை தொடர்ந்து இனி இந்த மறைமுக ஆட்சியெல்லாம் சரி படாது என்று முடிவு கட்டியது பிரிட்டிஷ் அரசு. சிப்பாய் கலகத்துக்கு ஆதரவு தந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் இரண்டாம் பகதூர்ஷா. கலக காரர்களால் ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட டெல்லியை மீண்டும் மிருக பலத்துடன் ராணுவம் கொண்டு கைப்பற்றியது பிரிட்டிஷ் நிர்வாகம். அப்போது அரண்மனையில் இருந்து தப்பிச்சென்று ஹுமாயூன் கல்லறைக்குள் ஒளிந்து கொண்டது பகதூர்ஷா குடும்பம். செப்டம்பர் 22, 1857 அன்று கேப்டன் வில்லியம் ஆர்ட்ஸ் அண்ட் தலைமையில் சென்ற சிறுபடையிடம் பதறி பதுங்கிக் கொண்டிருந்த பகதூர்ஷா சரணடைந்தார். கூண்டோடு ராஜ குடும்பத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் கைது செய்தனர். மனிதர்கள் மாறினாலும் மனப்பான்மை மாறுவதில்லை, அரச குடும்பத்தை செங்கோட்டைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பகதூர்ஷாவிடம் இருந்து அவரது இளம் மகன்கள் பிரிக்கப்பட்டு அவரது கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கோட்டையில் ஆங்கிலேயர்கள் ஆர்ப்பாட்டமாக நடமாட ஒரு தூண் அருகே கால்களை மடக்கியவாறு, கிழிந்த உடையுடன், பீதி நிறைந்த விழிகளுடன், உடல் நடுங்க, முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி பாதுஷா பகதூர்ஷா அமர்ந்திருக்க, அவருக்கு குற்றவாளி என்று ஆங்கிலேய நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனையாக பகதூர்ஷா கப்பலில் ஏற்றப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862 இல் ரங்கூனில் நிராதரவாக இறந்தார் பாபரின் வழித்தோன்றலும் கடைசி முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி பகதூர்ஷா. 

                  1858 இல் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் முகலாய ஆட்சி முடிவுக்கு வர, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அதிகாரப்பூர்வமாக சென்றது. அன்றிலிருந்து இந்திய நாடு ஒரு புதிய நட்சத்திரத்தின் கைவசம் மாறியது. அந்த பிரிட்டிஷ் நட்சத்திரத்தின் பெயர் விக்டோரியா மகாராணி. இதன் பிறகு பிரிட்டன் நாட்டின் கிழக்கிந்திய கம்பெனி முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்ய இருக்கிறது. அவற்றின் கீழ் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களும் அளப்பரியது. ஆனால் அதை நான் பொதுப்படையாக இங்கே என்னால் எழுத முடியாது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தை எழுத ஆரம்பித்தால் இன்றும் இருக்கும் சில அரசியல் கட்சிகளைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் சில உண்மையான தகவல்களை எழுத வேண்டியது வரும். அது இந்திய வரலாறு என பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் பொய்யாக இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல. மேலும் அரசியலை பொது வெளியில் பேச நானும் விரும்பவில்லை. நீங்கள் இதுவரை சுதந்திரப் போராட்டத்தின் காலத்தில் நடந்த நிகழ்வுகளை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் "கதை"களை அப்படியே நம்பிக் கொண்டிருங்கள். நான் அதை பொய் என நிரூபிக்க விரும்பவில்லை. 

                  வாசகர்கள் இதுவரை இந்த இந்தியாவின் கதை என்ற வரலாற்று தொடருக்கு கொடுத்து வந்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

                                                                                                                  முற்றும். 

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Benefits of Income Tax Return Filing