இந்தியாவின் கதை : மொகலாய சாம்ராஜ்யத்தின் முடிவுரை

 

                                                           வரலாற்றில் சில விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக சாம்ராஜ்ஜியங்கள் சட்டென்று முடிவு பெறாது. இருண்ட காலம் இருந்தாலும் மீண்டும் வரும் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த பரிதாப நிலை தான் ஔரங்கசீப் மறைவிற்குப் பின் மொகலாய சாம்ராஜ்யம் சந்தித்தது. ஔரங்கசீப் மறைவிற்குப் பிறகு அரியணையில் அமர்ந்த யாவருக்கும் நட்சத்திர அந்தஸ்து கிட்ட வில்லை. ஒரு சிலர் சில ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஒரு சிலர் சில நிமிடமே காட்சி தந்து எரிந்து மறையும் எரி கல்லை போல மாண்டு போயினர். பருந்துகள் வசித்த இடத்தில் இனி ஆந்தைகள் வசிக்கப் போகின்றன. குயில்கள் பாடிய இடத்தில் இனி காகங்கள் பாட போகின்றன. ஔரங்கசீப் இறந்தபோது அவரது மகன்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் கவர்னராக இருந்தனர். மூத்த மகன் ஷா ஆலம் காபூலிலும், இரண்டாவது மகன் ஆசாத் குஜராத்திலும் கடைசி மகன் காம்ப்க்க்ஷ் பீஜப்பூரிலும்  இருந்தனர். மறைந்த பாதுஷா விரும்பியபடி சாம்ராஜ்யத்தை பிரித்துக் கொண்டு ஆட்சி செய்ய மூத்தவரான ஷா ஆலம் மட்டுமே சற்று விரும்பினார். ஆனால் மற்ற இருவரும் வாட்கள் கொண்டே அதை தீர்மானிக்க முடிவெடுத்தனர். ஆதலால் சகோதர யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. தந்தை இறந்த போது ஷா ஆலத்தின் வயது 64. எத்தனை வயதானாலும் அரியணைக் காண போர் என்று வந்துவிட்டால், ஒன்று வெல்ல வேண்டும் அல்லது மடிய வேண்டும் இதுவே எழுதப்படாத விதி. மூவரும் தங்களுக்கென்று இருந்த படையை திரட்டி கொண்டு டெல்லி நோக்கி புறப்பட்டு வந்தனர். 1707, ஜூன் மாதத்தில் ஷா ஆலமும், ஆசாத்தும் ஆக்ரா அருகே மோதிக்கொண்டனர். ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற இந்த யுத்தத்தில் ஷா ஆலம் வெற்றி பெற்றார் போரில் ஆசாத் கொல்லப்பட்டார். வெற்றியை கொண்டாட நேரமில்லாமல் கடைசி தம்பியை சந்திக்க தெற்கு நோக்கி பயணித்தார். இந்தப் போரிலும் ஷா ஆலமே வெற்றி பெற்று கடைசி தம்பியையும் தோற்கடித்து அரியணையில் அமர்ந்தார். போரில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக காம்ப்க்க்ஷ் உயிரிழந்தார். இரு போர்களிலும் வெற்றி பெற்ற ஷா ஆலம் "பகதூர் ஷா" என்ற பட்டப் பெயருடன் அரியணையில் அமர்ந்தார். தவிர்க்க முடியாமல் போரில் இறங்கினாலும் சற்று மென்மையான மன்னர் தான் இவர் நான்கரை ஆண்டுகள் ஓரளவு நல்லாட்சி செய்து இயற்கை எய்தினார். 

                                   பகதூர் ஷா இறந்த பின்பு மீண்டும் வாரிசு பூசல் கிளம்பியது. இவரது நான்கு மகன்களும் ஆளுக்கொரு படையுடன் மோதினர். அவர்களில் ஜகந்தர் ஷா, தன் மற்ற மூன்று சகோதரர்களையும் தோற்கடித்து, கொன்றுவிட்டு அரியணையில் அமர்ந்தார். தன் சகோதரர்களின் மகன்களையும் சித்திரவதை செய்து வெறியாட்டம் நடத்தினார்.  அந்தப்புரத்திலும் இவரது ஆட்டம் சளைக்கவில்லை. இவரது ஆட்சியில் அறிவார்ந்த ஆலோசகர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஜால்ரா போடுபவர்களுக்கே பதவியும் மரியாதையும் கிடைத்தது. ஜகந்தர் ஷாவின் இறந்த ஒரு சகோதரரின் ஒரு மகன் மட்டும் இவரது கையில் சிக்காமல் தப்பித்து சென்றிருந்தார். இந்நாளில் ஒரு மாபெரும் படை திரட்டி வந்து தன் பெரியப்பாவை கொன்று அரியணையில் அமர்ந்த இளைங்கனின் பெயர் ஃபரூக்ஸியார். 

                                அரியணையில் அமரும் வரை ஒழுக்கமாக இருந்த இவரும் அரியணையில் அமர்ந்த பின்பு பித்து பிடித்தபோல் உருப்படாமல் போனார். 1719 இல் ராஜாங்க பிரபுக்கள் இவரை பதவியில் இருந்து நீக்கினர். சிறையில் தள்ளி சித்திரவதை செய்து இவரது கண்கள் நோண்டப்பட்டன. இறுதியாக இவரை கொலையும் செய்தனர். பின்னர் ராஜ குலத்து இளைஞர்கள் மூன்று பேரை அரியணையில் அமர்த்தி அவர்கள் சரியாக ஆட்சி செய்யவில்லை என பதவியில் இருந்து மீண்டும் இறக்கினர் இந்த பிரபுக்கள். அவர்களது பெயர் கூட வரலாற்றில் இடம் பெற வில்லை. சரியான வாரிசு இல்லாமல் டெல்லி அரியணை மிகவும் தவித்தது. 

                                ஒரு வழியாக மறைந்த பகதூர் ஷாவின் நான்காவது மகனின் மகன் முகமது ஷா பதினெட்டு வயது நிரம்பியதும் அவரை அரியணையில் அமர்த்தினர். நிர்வாகத்தில் பாதுஷாவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் நிஜாம் அல் முல்க் எனும் சக்தி வாய்ந்த ஓர் திறமை மிக்க அமைச்சர். ஆற்றல் மிகுந்த இவரை தனது பிரதம அமைச்சராக்க விரும்பினார் முகமது ஷா. ஆனால் டெல்லியில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலை இவருக்கு பிடிக்காததால் டெல்லியில் இருந்து வெளியேறி தெற்கே ஹைதராபாத் சென்று தன் திறமையையும் ஆற்றலையும் கொண்டு தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதுவே பின்னாளில் புகழ் பெறும் ஹைதராபாத் நிஜாம்கள். முகமது ஷா தனிப்பட்ட முறையில் மென்மையானவர். கொலை வெறியாட்டம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சுய ஒழுக்கம் இல்லாதவர். அந்தப்புரத்திலேயே வாழ்ந்தார். மது, மாது என சுயநினைவு இல்லாத அளவு வாழ்ந்தார். வாசகர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஔவுரங்கசீப் இறந்த பிறகு இது கிட்டத்தட்ட நான்காம் தலைமுறை. இத்தனை ஆண்டுகளாக டெல்லியில் நிலவும் இந்த குழப்பத்தால் சிறு சிறு பிரதேசங்கள் சும்மா இருக்குமா?? ஏற்கனவே ஒவ்வொரு பிரதேசமாக டெல்லி ராஜ்ஜியத்தை விட்டு விலகிக் கொண்டிருந்தன. டெல்லி பாதுஷாவால் எதுவும் செய்ய இயலவில்லை. இப்படியாக, மொகலாய சாம்ராஜ்யம் துவண்டு கொண்டிருந்த நேரத்தில் தான் வந்தது மிகப்பெரிய ஆபத்து. அதன் பெயர் நாதிர் ஷா. எளிமையான குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி பாரசீகத்தின் அரியணையில் அமர்ந்த மன்னர் நாதிர் ஷா. 

                                 அவர் கனவு பாரசீகத்தையும் தாண்டி இந்தியாவின் மீது விழ ஆரம்பித்தது. இந்தியா மீது அவருக்கு கோபமும் இருந்தது. தூதரக வழியில் பாரசீகத்தில் இருந்து அனுப்பப்படும் எந்த கடிதத்திற்கும் டெல்லி பாதுஷா பதில் கடிதம் அனுப்பாமல் இருந்தார் அது தன்னையும் பாரசீகத்தையும் அவமதிப்பது போல் கருதி கோவமாக இருந்தார். இருப்பினும் அவர் கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார். டெல்லி பாதுஷா அதை கண்டு கொள்ளவே இல்லை. ஒவ்வொரு பிரதேசமாக விலகிக் கொண்டிருந்ததில் மராட்டியம் மிகவும் முக்கியமானது. மராட்டியத்தின் எல்லையை விரிவாக்கம் செய்து கொண்டே போயினர். இது இஸ்லாம் மதத்திற்கு எதிராக அமையும் என நாதிர்ஷா இந்த முறை சற்று எச்சரிக்கையுடனே டெல்லி பாதுஷாவுக்கு கடிதம் எழுதினார். இதற்கும் முகமது ஷா பதில் அனுப்பவில்லை. கோபத்தில் உச்சிக்கு சென்ற நாதிர்ஷா என் மதத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது அதை நான் நிச்சயம் செய்வேன். என் படையுடன் நான் இந்தியா வருகிறேன் என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பிவிட்டே அங்கிருந்து புறப்பட்டார்.

                                1739 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று டெல்லி படையும் பாரசீக படையும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. ஒரு காலத்தில் இந்திய நாட்டுக்கே உரிய யானை படையை கண்டு அந்நிய படையெடுப்புகள் நடுங்கினர். ஆனால் தற்போது மற்ற நாடுகளிலும் யானைகள் போரில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால் யானைகள் மீதான பயம் எதிரிகளுக்கு இல்லை. மாறாக யானையை ஒட்டகத்தை வைத்து எப்படி மிரள செய்ய வேண்டும் என்ற யுக்தி அவர்களுக்கு தெரிந்திருந்தது. பாரசீக படை எதிர்பார்த்ததை விட மிக எளிமையான வெற்றி கிடைத்தது. ஆம். போரில் டெல்லி பாதுஷா தோற்றுப் போனார். வெற்றிக் களிப்பில் கூடாரத்தில் அமர்ந்திருந்த நாதிர் ஷா முன் டெல்லி பாதுஷாவை கொண்டு வந்து நிறுத்தினர். முகமது ஷாவை தனக்கு சரிசமமாக அமர வைத்து அவருடன் பேசினார் நாதிர் ஷா. தங்களுக்கு நான் எத்தனையோ கடிதம் எழுதியும் ஒரு கடிதத்திற்கு கூட நீங்கள் பதில் கடிதம் அனுப்பவில்லை உங்களுக்கு இதைப் பற்றி கூட தெரியாதா? என நியாயமான பல கேள்விகளை கேட்டார். முகமது ஷாவால் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்த வாரே அமர்ந்திருந்தார். சரி, இருவரும் களைத்திருக்கிறோம். மற்றவற்றை பிறகு பேசிக்கொள்வோம். இப்பொழுது டெல்லி அரண்மனை சென்று ஓய்வெடுப்போம் என்று கூறி முகமது ஷாவையும் அழைத்துச் சென்றார்.

                                 நாதிர் ஷா பொதுமக்களை அச்சமுறுத்த விரும்பவில்லை. ஆதலால் தன் பெரும் படையை டெல்லி நகருக்கு வெளியில் நிறுத்தி விட்டு ஒரு சிறிய படையோடு மட்டுமே டெல்லி நகருக்குள் சென்றார். வியாபாரிகள், பொதுமக்கள்,  பிரபுக்கள் என அனைவரும் தங்களிடம் இருக்கும் செல்வத்தை நாதிர்‌ ஷாவிடம் கொடுத்து மண்டியிட்டனர். மதுக்‌ கின்னத்துடன் அமர்ந்திருந்த முகமது ஷாவை பார்த்து "உங்களுக்கு ஆடல் பாடலில் நிறைய திறமை உண்டாமே??" எனக் கேட்டார் நாதிர் ஷா. உடனே தன் இடையில் மணிகளை கட்டிக்கொண்டு கையில் மதுவை எடுத்து க்கொண்டு நாட்டிய பெண்களோடு இணைந்து சபையில் அனைவரது முன்பு நடனமாடத் தொடங்கினார் - பாபர், அக்பர், ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப் போன்ற பேரரசர்கள் வழிவந்த இந்த முகமது ஷா.

               செழிப்போடும் செல்வாக்கோடும் பெரும் சக்தியாக திகழ்ந்த இந்திய தலைநகரம் இவ்வளவு எளிதாக தன் மடியில் விழுந்து விட்டது என நாதிர்ஷா சற்று ஆச்சரியப்பட்டு போனார். இரவு போர்வை நகரை மூடியவுடன் ஓய்வெடுப்போம் என்று நினைத்த அவருக்கு மதுவும் மாதுவும் தேவைப்பட்டது. டெல்லி அரண்மனைக்கு வந்ததிலிருந்தே தன் அழகால் நாதிர்ஷாவை கவர்ந்த இந்து அடிமைப் பெண்ணான நூர்பாய் அவருக்கு தேவைப்பட்டாள். அடுத்த நாள் காலை விடிந்த போது ஒரு விசித்திரமான செய்தி காத்திருந்தது. ஜும்மா மசூதியில் தொழுகையின் போது மன்னர் நாதிர் ஷாவின் பெயரை முன்வைத்து குத்பா ஓதப்பட்டபோது கூடியிருந்த மக்களிடையே கேலிக் குரல்களும் கண்டன குரல்களும் எழுந்தன என்றும் அதை தொடர்ந்து செங்கோட்டைக்கு வெளியே சற்று அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது எனவும் மெய்க்காவலர் வந்து சொன்னார். மேலும் தொடர்ந்த அந்த மெய்க்காவலர், கடைத்தெரு வழியாக செல்லும் நம் வீரர்களை பார்த்து டெல்லி மக்கள் யேசுகின்றனர். கிண்டலும் கேலியும் தாங்க முடியவில்லை. நம் தளபதிகள் குதிரையில் செல்லும் போது மாடியில் இருந்து பெண்கள் குப்பைகளை அவர்கள் மீது கொட்டுகின்றனர். அரிசி, இறைச்சி என எது வாங்க கடைத்தெருவுக்கு சென்றாலும் நமக்கு மட்டும் அதிக விலை சொல்கின்றனர். தங்கள் ஆணை எதுவும் இல்லாத நிலையில் இந்த விசித்திரமான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என தளபதிகள் குழம்புகின்றனர் என்று கூறினார். மேலும் நம் படைவீரர்கள் சில நூறு பேர் மட்டுமே நகருக்குள் இருக்கின்றனர். நமது மொத்த படையும் டெல்லி மக்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என டெல்லி நகருக்கு வெளியே நிற்கிறது இது இவர்களுக்கு ஏன் புரியவில்லை என்று வருத்தத்துடன் மன்னரிடம் தெரிவித்தார். நாதிர் ஷாவின் கண்கள் சிவந்தன. பொங்கிய கோபத்தை அடக்கி கொண்ட அவர், "டெல்லி மக்கள் முட்டாள்கள் என்று தோன்றுகிறது. வலுக்கட்டாயமாக தண்டனையை வரவழைத்துக் கொள்ள வழி தேடுகிறார்கள். இருந்தாலும் சற்று பொறுமையோடு இருப்போம்" என்று கூறிவிட்டு சென்றார்.

                                     மறுநாள் விடிந்தது. தேதி 10, மார்ச் 1739. அன்று சனிக்கிழமை அதுவும் பக்ரீத் பண்டிகை திருநாள். பண்டிகையை கொண்டாட, பலியிடுவதற்கு சில பசுமாடுகளை நாதிர்ஷா வீரர்கள் பிடித்துக் கொண்டு போக, இந்து மக்கள் ஆவேசப்பட்டு "ஒழிக" என குரல்கள் எழுப்பினர். வீரர்கள் மீது கற்களும் விழுந்தன. இதெல்லாம் ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் அரிசி வாங்க சென்ற வீரர்களுக்கு யாரும் அரிசி தரவில்லை. வீரர்கள் அனைவரும் செய்வதறியாமல் தவித்தனர். சில வீரர்களை மக்கள் அடித்து விரட்டினர். இச்செய்திகள் அரண்மனையை வந்தடைய, இச்செய்தி உண்மைதானா? அங்கு நிலைமை என்ன? என்பதை அறிய, பத்து வீரர்களை அனுப்பினார் நாதிர் ஷா. அதில் மூன்று வீரர்கள் மட்டுமே திரும்பி வந்தனர். அதுவும் பலத்த காயங்களுடன் மீதம் ஏழு வீரர்களை மக்கள் அடித்து கொன்று விட்டனர் என்று சொன்னார்கள். நாதிர்ஷாவின் கோபம் அனலாக பறந்தது. ஊருக்கு வெளியில் இருக்கும் மொத்த படையும் டெல்லி நகருக்குள் பிரவேசிக்க ஆணை பிறப்பித்தார். மேலும் தானே நேரில் சென்று நிலைமையை பார்க்க புறப்பட்டார். டெல்லியை வெற்றி பெற்ற அனைத்து அந்நிய மன்னர்களின் வழக்கத்துக்கும் மாறாக நாதிர்ஷா இரண்டு நாட்கள் பொறுமை காத்தது உண்மை என அனைத்து வரலாற்று புத்தகங்களுமே குறிப்பிடுகின்றன. அதே சமயம், தமக்குள்ளே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் அந்நிய மன்னர் ஒருவர் தலையிடுவதை டெல்லி மக்கள் விரும்பவில்லை. ஒரு வேளை, பாரசீக படையின் முழு பலத்தையும் டெல்லி மக்கள் பார்த்திருந்தால், பயந்து பேசாமல் இருந்திருப்பார்களோ?என்னவோ. கடைவீதிகளில் உதிரிகளாக தங்கள் எதிரி நாட்டு வீரர்களை பார்த்தபோது மக்களுக்கு பயப்பட தோன்றவில்லை. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டார்கள். ஆனால் இத்தோடு விதி, தன் கண்களை மூடிக்கொண்டு டெல்லியை நிராயுதபாணியாக விட்டு ஓடிச் சென்றது.

                                குதிரையில் புறப்பட்ட நாதிர்ஷா கடைத்தெரு பகுதியில் இருந்த ஒரு மசூதி படிக்கட்டுகளில் ஏறி அங்கிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தார். மக்களிடையே "திரும்பிப் போ திரும்பிப் போ" என்ற குரல்கள் பலமாக எழுந்தன. "இதுதான் கடைசி எச்சரிக்கை..... 5 நிமிடம் அவகாசம் தருகிறேன். அனைவரும்  அமைதியாக கலைந்து சென்று விடுங்கள். ஐந்தே நிமிடம்....." என்று தன் தனது கோபத்தோடு கர்ஜித்தார் நாதிர் ஷா. ஆனால் மக்கள் முகத்தில் பயம் தெரியவில்லை. மாறாக தக்காளியும் முட்டையும் பாரசீக மன்னர் மீது வந்து விழுந்தன. மேலும் ஒரு விபரீதம் நடந்தது. ஏதோ ஒரு மாடியில் இருந்து குறி வைக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து சீறி வந்த தோட்டா, நாதிர்ஷாவுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம் மெய் காவலர் மார்பில் ஊடுருவ, உயிரிழந்த அந்த வீரரின் உடல் பாரசீக மன்னர் நாதிர்ஷாவின் மடியில் விழுந்தது.  எழுந்த நாதிர்ஷா தன் இடையில் இருந்த வாளை உருவினார். சரியாக இதே நேரத்தில் வெளியில் இருந்த படையும் உள்ளே நுழைந்தது. கோபத்தோடு தன் வாளை உயர்த்தி பிடித்த அவர், அடித் தொண்டையில் இருந்து கர்ஜித்தார். "இப்போது நம் படைவீரர்கள் அனைவரது வாட்களும் இயங்க வேண்டும். நான் எனது வாளை மறுபடியும் உறைக்குள் போடும் வரை நம் பாரசீக படை இந்நகரின் அனைத்து மக்களின் தலையையும் சீவ வேண்டும். பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரையும் கொள்ளுங்கள். டெல்லியில் ஒரு உயிர் கூட மிஞ்ச கூடாது" என உத்தரவிட்டார். சுமார் 340 ஆண்டுகளுக்கு முன் தைமூர் படை டெல்லியை என்ன செய்தது என்று வாசகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதேபோன்ற கொடூரம் மீண்டும் நடக்கிறது. சில மணி நேரங்களில் பல லட்சக்கணக்கான டெல்லி மக்களின் தலைகள் தரையில் உருண்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் நுழைந்து ஒடுங்கி ஒளிந்து கொண்டிருப்பவர்களை வெளியே இழுத்துப் போட்டு குடும்பம் குடும்பமாக வெட்டிக் கொன்றனர் பாரசீக வீரர்கள். பயத்தில் ஆழ்ந்த பல மக்கள் மாடியில் இருந்து குதித்தும் கத்தியால் தங்களை தாங்களே குத்தியும் தற்கொலை செய்து கொண்டனர். பாரசீக வீரர்கள் கடைத்தெருவுக்கு தீ வைத்தனர். அதில் டெல்லி மக்களை உயிருடன் போட்டுக் கொன்றனர். காலை ஆரம்பித்த இந்த பாரசீகக் கொலை விழா மதியம் வரை நீண்டது. தனது சில அமைச்சர்களுடன் கலங்கிய முகத்துடன் நடுங்கியவாறு வந்தார் முகலாய சக்கரவர்த்தி முகமது ஷா. நாதிர்ஷாவின் கால்களில் விழுந்து முத்தமிட்டு தன் மக்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார். டெல்லி பாதுஷா மக்களுக்காக அழுவதை பார்த்து சற்று மனம் இறங்கினார் நாதிர்ஷா. தன் வாளை உரையில் போட்டுக் கொண்டார். அதன் பிறகே இந்த அழிவு நிறுத்தப்பட்டது. 

                                 யுத்தங்கள் முடிந்த பிறகு இரு தரப்புக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்படுவது அந்த காலத்தில் நடைமுறையில் இருந்தது அதில் திருமண ஒப்பந்தமும் ஒரு வகை அதன்படி அவுரங்கசீப் பாதுஷாவின் பேரன் இஸ்தான்பக்ஸ் ( காம் பக்ஷ் மகன்) என்ற இளவரசரின் மகளுக்கும், நாதிர்ஷாவின் மகனுக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 70 கோடி ரூபாய் தங்க வெள்ளி நாணயங்கள், 50 கோடி மதிப்புள்ள நகைகள், பல கோடி மதிப்புள்ள தங்க தாம்பாளங்கள், 100 யானைகள், 7000 குதிரைகள், 10 ஆயிரம் ஒட்டகங்கள்,  கலைஞர்கள் 100 பேர் தச்சர்கள்,  கொல்லர்கள் என்று 500 பேர், உச்சகட்டமாக விலை மதிப்பில்லாத மயிலாசனம் என அனைத்தையும் நாதிர்ஷா எடுத்துக்கொண்டு பாரசீகம் புறப்பட்டார். 

                          இப்படி 300 ஆண்டுகள் முகலாய சாம்ராஜ்யம் சேர்த்த அனைத்து சொத்துக்களும் ஒரு நிமிடத்தில் கைமாறி போனது. இருந்தது ஒன்றே ஒன்றுதான் அதுதான் விலை மதிக்க முடியாத கோஹினூர் வைரம். அதை எங்கே? என்று நாதிர்ஷா கேட்க, "தெரியவில்லை அது எங்கே சென்றது என்று" என பதில் சொன்னார் முகமது ஷா. சற்று நேரம் யோசித்த நாதிர் ஷா, அது முகமுது ஷாவின் தலைப்பாகையில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். டெல்லி பாதுஷாவிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் நண்பர்கள் இருவர் பிரியும் போது தலைப்பாகை மாற்றிக் கொள்வது எங்கள் பாரசீக வழக்கம் என்று கூறி வலுக்கட்டாயமாக தலைப்பாகையை மாற்றிக் கொண்டார். தற்போது தன் தலைக்கு வந்த இந்த தலைப்பாகை எடுத்து பார்த்த போது அதனுள் இருந்தது பளீரென்று மின்னல் அடித்தவாறு கோஹினூர் வைரம். அதுவும் நாதர்ஷா கைக்கு சென்று விட, பாரசீகம் சென்றது அந்த விலைமதிப்பில்லா வரலாற்று வைரம்.  

   

                         

                                

                                   

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Benefits of Income Tax Return Filing