இந்தியாவின் கதை: பாபர்

                                                          ஐரோப்பாவையும் ஆசியாவையும் நடுங்க வைத்த துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையும் மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் பரம்பரையும் இணைந்ததில் பிறந்தவர்தான் பாபர். பொதுவாக துருக்கியர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள் கல்வியறிவும், புத்திசாலித்தனமும்,ராஜதந்திரமும் அமையப் பெற்றவர்கள். ஆனால்    மங்கோலியர்கள் யாருக்கும் அஞ்சாத ஆவேசமான போர் வீரர்கள். இந்த இரு இனங்களின் ரத்தமும் கொண்டவர்தான் பாபர். அதனால் தான் அவரால் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சோதனை எல்லாம் கடந்து பிற்பாடு இந்தியாவில் ஒரு தீர்க்கமான சாம்ராஜ்யம் அமைத்து உலகப் புகழ் பெற முடிந்தது. கி.பி.  1483 இல் பர்கானா எனும் சிறு ராஜ்யத்தின் மன்னரான உமர் சேக்- க்கு மகனாகப் பிறந்தார். பாபருக்கு 11 வயது நடக்கும் பொழுது அவர் தந்தை இறந்துவிட்டதால் ஆட்சிப் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். மாமன்னர் தைமூர் ஆண்டுவந்த நிலப்பரப்பு அவரது மறைவுக்குப்பின் பல பகுதிகளாக சிதறி பிரிந்து போனது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மன்னர் ஆண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் தைமூரின் பரம்பரையில் வந்தவர்கள்தான். பர்கானா ஆட்சிப்பொறுப்பை ஒரு 11 வயது சிறுவன் பெற்றிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் சுற்றியிருந்த சிற்றரசர்கள் பர்கானாவை கைப்பற்ற வந்து சேர்ந்தனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே மக்களின் நன்மதிப்பை பாபர் பெற்றிருந்தார். எதிரிகளின் படை உள்ளே நுழைந்தவுடன் சற்றும் பயமில்லாமல் எதிரிகளோடு போர் புரிய தயாரான அந்த சிறுவனைப் பார்த்து மக்கள் பெருமைப் பட்டனர். பாபரின் தலைமையில் வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தால்  எதிரிகளின் படை பின்வாங்கியது, போரில் பாபர் வெற்றி பெற்றார். இருப்பினும் தற்காப்பு மட்டுமே செய்து கொண்டிருந்தால் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் இந்த ராஜ்யத்தை இழக்க நேரிடும், ஆதலால் சாமர்கண்ட் நகரை கைப்பற்றி நமது பலத்தையும் செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று பாபர் முடிவு செய்தார்.

                                                         அதற்கு  திட்டம் போட்டுக்கொண்டிருந்த அதே வேலையில், சாமர்கண்ட்  அரசர் காலமானார். அதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதுதான் தருணம் என்று முடிவு செய்த பாபர்  படையெடுத்துச் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவருக்கு முன்னாலேயே இரு படைகள் சாமர்கண்ட் நகரின் வாசலில் நின்று முட்டி மோதிக் கொண்டிருந்தது. அதில் ஒரு படை ராஜ்யத்திற்கு அல்லாமல் தன் காதலுக்காக வந்திருப்பதை அறிந்த பாபர், அந்த படையுடன் கூட்டணி வைத்தார். காதல் ஜோடிகளை இணைத்து வைத்து அவர்களது படையுடன் சேர்ந்து மற்றொரு படையுடன் போருக்குச் சென்றார். ஆனால் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால், தாக்குதலை நிறுத்திவிட்டு பர்கானா திரும்பினார். சில மாதங்கள் கழித்து மறுபடியும் தாக்குதலைத் தொடர்ந்த பாபர் 7 மாத முற்றுகை மற்றும் போருக்குப்பின்   


வெற்றி பெற்றார். 14 வயதில் சாமர்கண்ட் அவரின் அரியணையில் அமர்ந்தார். உடனே அவர் செய்த காரியம் தைமூரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார். ஆனால் விதி பாபரை மூன்று மாதங்களுக்கு மேல் மன்னராக இருக்க விடவில்லை. குளிர்காலத்தை தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பட்டினியால் ராஜியத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பல படைத் தளபதிகள் மற்றும் வீரர்கள் பாபரின் படையில் இருந்து விலகிச் சென்றனர். இதே காலகட்டத்தில் பர்கானா நகரில் பாபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டது தங்களுக்கு ஒரு 14 வயது சிறுவன் அடங்கி நடப்பான் என்று நினைத்த பிரபுக்கள் பாபரின் திறமையால் சற்று கலக்கம் கொண்டனர் பாபரின் தம்பி ஒருவருக்கு பட்டம் சூட்டி பாபரை எதிர்க்க தயாராகினர் விவரம் அறிந்து சாமர்கண்ட் நகரிலிருந்து பர்கானா நகருக்கு செல்லும் நேரத்தில் அவரை எதிர்க்க மாபெரும் படை தயாராகி நின்றது. சரிதான், திரும்பலாம் என்று பார்த்தால் அதே நேரத்தில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றி விட்டனர் எதிரிகள். ஏக காலகட்டத்தில் பர்கானா மற்றும் சாமர்கண்ட் இரு நகரையும் இழந்து நடுத் தெருவில் நின்றார்.


                                                     பாபர் சில நூறு பேரைக் கொண்ட தனது சிறு படையுடன் பாலைவனத்தின் நடுவில் சிறு மண்  கோட்டைக்குள் புகுந்து குளிரிலிருந்து தன்னை காத்துக் கொண்டார். பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட பாபர் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. தன்னுடன் இருந்த சில வீரர்களுடன் இரவில் பக்கத்து கிராமங்களுக்கு சென்று தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றி அங்கிருந்த உணவுப் பொருட்களை கைப்பற்றிக்கொண்டு வீரர்களையும் சேர்த்துக் கொண்டார் பாபர். இவ்வாறு சில மாதங்கள் ஓட சிறிது சிறிதாக நிலப்பரப்பை கைப்பற்றி ஒரு பெரும்படையை கட்டமைத்துக் கொண்டார். மீண்டும் பர்கானா நகரின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். பர்கானா வில் ஆட்சியிலிருந்த தனது சகோதரனின் தலையை வெட்டாமல், அவரை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டார். நாம் இருவரும் சேர்ந்து சாமர்கண்ட் நகரை கைப்பற்றிய பிறகு, பர்கானா தன் சகோதரனுக்கும் சாமர்கண்ட் பாபருக்கும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். ஆனால் விதி மீண்டும் பாபருக்கு குறுக்கே வந்தது. பாபருக்கு முன்னாள் அவரது பங்காளியான சைப் அலி கான்  படை சாமர்கண்ட் நகரை கைப்பற்றிக்கொண்டது.

                                          இப்போதைக்கு போர் வேண்டாம் என்று படைத்தளபதிகள் சொன்னபோதிலும்,  அதைப் பொருட்படுத்தாமல் உடனடியாக சாமர்கண்ட் நகரை நோக்கிச் சென்றார்.  சைப் அலி கான் கோட்டையை விட்டு வெளியே சென்றிருக்கும் நேரமாக பார்த்து பாபரின் படை கோட்டைக்குள் நுழைந்து அவரது கொடியை ஏற்றி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டனர். நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக கோஷமிட்டதால் சைப் அலிகானின் படை நகரைவிட்டு வெளியே சென்றது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு  சைப் அலி கான் மீண்டும் சாமர்கண்ட் நகரின் மீது படையெடுத்து வந்தார். பாபர்



போருக்கு தயாராக... ஆனால்,  சைப் அலி கான் திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. நேரடி தாக்குதல் நடத்தாமல் வலுவான முற்றுகையில் இறங்கினார். இதனால் சில நாட்களுக்குப் பிறகு கோட்டையில் உணவு பஞ்சம் ஏற்பட, பாபரின் படையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பழையபடி நம்பிக்கை இழந்த சில படைத் தளபதிகள் மற்றும் வீரர்கள் இரவில் தப்பித்துச் சென்றனர். பாபர் வெள்ளைக்கொடி காண்பித்து சமரசம் பேச வேண்டியதாயிற்று. அதன்படி பாபரின் சகோதரியான  கான்சாதா வை சைப் அலி கானுக்கு திருமணம் செய்து வைத்தனர். பாபரின் உயிருக்கு பதில் அவரை நகரில் இருந்து வெளியேற்றினர். இப்போது பாபரிடம் மிச்சமிருந்தது - எதுவும் இல்லை அவரது மன உறுதியை தவிர.  இவரே பின்னாளில் இந்தியாவில் ஒரு மாபெரும் உலகப் புகழ் வாய்ந்த சாம்ராஜ்யத்தை தோற்றுவிக்க போகிறார் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை

"தோல்வி என்பது மாற்றியமைக்கப்பட வேண்டிய
ஒரு தற்காலிக பிரச்சனையே" - இது பாபரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால் தான் வாழ்வில் அவ்வளவு துயரம் ஏற்பட்டபோதும் தளராமல் இருந்தார். இரவோடு இரவாக கோட்டையிலிருந்து வெளியேறிய பாபர் தன் மாமன்கள் வசித்துவந்த நகரமான தாஷ்கண்ட் நகரை வந்தடைந்தார். போர் என்றால் ஆவேசமாக மோதுவது, விருந்தாளி என்று வந்தால் விமர்சையாக உபசரிப்பது இந்த இனத்தின் வழக்கம். இருப்பினும் பாபருக்கு தன்னுள் மிக அவமானமாக இருந்தது. தனக்கென ஒரு நாடு இல்லை, தனக்கென ஒரு வீடு கூட இல்லை, தன் சகாக்கள் தன்னை விட்டு பிரிந்து சென்றனர் என்று தன் சுயசரிதையில் பாபர் குறிப்பிடுகிறார்.
பாபரின் தாய்மாமன்கள் மற்றும் சில உறவினர்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறிய படையை கொண்டு பெர்கானாவை பாபர் மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களில் சைப் அலி கான் படை மீண்டும் தாக்கி பெர்கானாவை கைப்பற்றி கொண்டது. விதி விளையாடும் விளையாட்டில் உதை படும் கால்பந்தாகவே பாபரின் வாழ்க்கை இருந்து வந்தது. ஆனால் விதி அதை நிறுத்தி, பாபரை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தது. ஒரு செய்தி வந்தது ஆப்கானிஸ்தானில் அரசர் திடீரென்று இறந்துவிட்டார், சரியான வாரிசு இல்லை என்பதால் யாரோ ஒருவன் அரசைக் கைப்பற்றி இருக்கிறான். சற்று முயற்சி செய்தால் காபூல் நம் வசம் என குறிப்பிட பட்டிருந்தது.  பாபர், 200 பேர் கொண்ட சிறிய படையுடன் காபூல் நோக்கி புறப்பட்டார். தன்னம்பிக்கையுடன் முன்னேற்ற பாதையில்  நடை போடுபவர்களை உலகம் எப்போதும் காதலிக்கும். அதற்கேற்றார்போல் பாபர் படை எடுத்து வருகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் செல்லும் வழியில் உள்ள கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பலர் பாபரின் படையில் கொண்டனர். முன்னேறி செல்ல செல்ல பாபரின் படை பரந்து விரிந்து கொண்டே சென்றது. காபூல் நகரை முற்றுகையிட்ட உடன் காபூல் மன்னன் பெயரளவில்  சில அம்புகளை எய்து விட்டு தப்பிச் சென்றான். கி.பி. 1504 இல் காபூல் அரியணையில் பாபர் அமர்ந்தார். இத்தனை சோதனைகளை கடந்து ஒரு அரியணையில் அமர்ந்த போது பாபரின் வயது இருபத்தி இரண்டு என்பது ஆச்சரியப் பட வைக்கும். உலகில் தன்னம்பிக்கை தர எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட போதிலும், பாபரின் சுயசரிதையான "பாபர் நாமா" எனும் நூலே அதில் மணிமகுடம் என்று சொன்னால் அது மிகையல்ல. தன்மகன் அரியணையில் அமர்ந்ததை பார்த்த ஓராண்டுக்குப் பிறகு பாபரின் தாய் காலமானார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாபரின் மூத்த மகன் பிறந்தார். அவருக்கு ஹூமாயூன் என்று பெயரிட்டார் பாபர். ஒரு முறை பாபர் காபூல் நகரின் சந்தைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு நாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் குதிரைகள் ஏற்றுமதியாகும் என்பதையும் அதற்கு பதிலாக அந்த நாட்டில் இருந்து கண்ணை பறிக்கும் பட்டுத்துணிகள், முத்துக்கள், உயர் ரக சர்க்கரை, ஏலக்காய் போன்ற பொருட்கள் இறக்குமதி ஆகும் என்பதையும் அறிந்துகொண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட அவர், இது எந்த நாட்டுடனான வர்த்தகம் என்று கேட்டார். பதில் "இந்தியா" என வந்தது. இந்த நொடியே இந்தியாவை ஆள வேண்டும் என்ற எண்ணம் பாபருக்கு மனதில் ஓர் ஓரத்தில் வந்தது. இந்தியா மீது காதல் வயப்பட்டார். தனது  பழைய காதலியான சாமர்கண்ட் நகரை மட்டும் பாபர் மறக்கவேயில்லை. சமயம் பார்த்து பாரசீக மன்னன் ஷா இஸ்மாயிலுக்கும் பாபரின் விரோதியான ஷைப் அலி கானுக்கும் பகை மூண்டது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதிப்படி பாபரும் ஷா இஸ்மாயிலும் கூட்டணி வைத்து சைப் அலிகானை வென்றனர் அதற்கு பதிலாக பாபருக்கு சாமர்கண்ட் நகரம் மீண்டும் கிடைத்தது. ஆனால் அந்த நகரம் மட்டும் பாபருக்கு ராசியே இல்லாமல் போனது. பாபர் ஒரு சன்னி பிரிவை சார்ந்த முஸ்லிம். சாமர்கண்ட் நகரின் பெரும்பான்மையான மக்களும் சன்னி பிரிவை சார்ந்தவர்களே. ஆனால் மன்னர் ஷா இஸ்மாயில் ஷையா பிரிவைச் சார்ந்த முஸ்லீம். சாமர்கண்ட் நகரில் பிரவேசிக்கும்போது தன் வழக்கப்படி பாபர் உடையணிய வேண்டும் என்று மன்னர் இஸ்மாயில் விரும்பினார். பாபரும் வேறு வழியில்லாமல் ஷையா வழக்கப்படி தலைப்பாகை மற்றும் உடை அணிந்ததால் தன் மன்னரையே ஒரு அன்னியரை போல் மக்கள் உணரத் தொடங்கினர். அந்த நொடி முதலே பாபர் மக்களிடம் செல்வாக்கை இழக்கத் தொடங்கினார்.  இதுதான் சமயமென்று உஷ்பக் நாட்டு படை சாமர்கண்ட் நகரை தாக்க, மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால் பாபரே அந்த நகரை விட்டு வெளியேறி மீண்டும்  காபூலுக்கு வந்து சேர்ந்தார். அடுத்த இலக்கு இந்தியாதான் என்று பாபர் முடிவெடுத்த நேரத்தில்தான் தவுலத் கான் எழுதிய இந்தியாவிற்கு வாருங்கள் என்ற அழைப்பிதழ் வந்தது. இதுதான் தருணம் என்று உடனே படையைக் கிளப்பினார் பாபர். ஆனால் பாபரின் உண்மையான எண்ணம் உதவி செய்வது அல்ல, என்றும் அவரே டெல்லியை கைப்பற்ற எண்ணுகிறார் என்பதை அறிந்த தவுலத் கான், பாபரை எதிர்த்து போர் புரிந்தார். 40 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையை 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட தன் படையுடன் பாபர் எதிர்த்து நின்றார். பல போர்கள் புரிந்த அனுபவம் கொண்டு மாபெரும் படையை வென்றார் பாபர். தவுலத் கானை கைது செய்து பாபரின் முன் நிறுத்தினர். டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோடியின் கொடுமை தாங்க முடியாமல் தானே என்னை உதவிக்கு அழைத்தீர்கள் எதிரிக்கு எதிரி நண்பர்கள் தானே என் மீது ஏன் போர்? என்று பாபர் கேட்டவுடன் வெட்கி தலை குனிந்தான் தவுலத் கான். அதை அடுத்து நேரம் கடத்தாமல் டெல்லியை நோக்கி புறப்பட்டார். டெல்லி மாநகருக்கு அருகே சுமார் 50 மைல் தொலைவில் பானிபட் என்ற நகரத்தை அடைந்தபோது போர் முரசு கொட்டியது கி.பி.1526 ஏப்ரல் மாதம் 21 அன்று இப்ராஹிம் லோடியின் தலைமையிலான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரை வீரர்கள் கொண்ட படையும், மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம் வீரர்கள் கொண்ட பாபரின் படையும் மோதியது. 

உலக சரித்திர புகழ்பெற்ற பானிப்பட் யுத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பாபரின் மனைவிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். மன்னர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொள்வது சகஜமான ஒன்று. ஆயேஷா என்ற முதல் மனைவி பாபரின் மனம் கவரவில்லை என்றாலும், அவரது தங்கை மஸுமா பாபரைக் கண்களால் கைது செய்வார். மொத்தமாக 17 குழந்தைகள் பிறந்ததில் அதில் பல குழந்தைகள் இறந்து போயின. மாஹிம் பேகம் என்ற மனைவிக்கு பிறந்தவர் தான் ஹூமாயூன். ஏழு திருமணங்கள் செய்த பாபருக்கு எட்டாவது முறையாக காதல் வந்தது ஆனால் இந்த காதல் ஒரு பெண்ணின் மீது அல்ல, ஒரு பொருளின் மீது. அந்தப் பொருளின் பெயர் "துப்பாக்கி". துருக்கியர்கள் புத்திசாலிகள் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?? அதற்கேற்ப மற்ற நாடுகளில் ஈட்டியையும், வில் அம்பையும் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் துருக்கியர்கள் யுத்தத்தில் துப்பாக்கியையும், பீரங்கிகளையும் பயன்படுத்தினர். துருக்கி நாட்டைச் சார்ந்த உஸ்தாத் அலி என்பவர் மூலம் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பாபருக்கு கிடைத்தது. அவரின் உதவியுடன் பாபரின் படையில் துப்பாக்கி மற்றும் பீரங்கி படை பிரிவு உருவானது. தென்னிந்தியா உடன் கடல்வழி வணிக உறவு கொள்ளாத நாடுகளே அப்போது இல்லை என்று கூறலாம். ஆதலால் துப்பாக்கி மற்றும் பீரங்கி பற்றி தென்னிந்திய அரசர்களுக்கு அப்போதே தெரியும். ஆனால் வட இந்தியா அப்படி இல்லை. வட இந்திய அரசர்கள் இன்னும் வாட்களையே நம்பியிருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரை வீரர்களும் வில் வீரர்கள் கொண்ட படையும் பாபரின் தலைமையிலான சுமார் 12 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறிய படையும் நேருக்கு நேராக மோதியது. இதுவே உலக சரித்திர புகழ்பெற்ற "பானிப்பட் யுத்தம்". 12 வயதிலிருந்து போர் அனுபவம் பெற்ற பாபரை வெறும் பன்னிரண்டாயிரம் வீரர்கள் தானே என்று இப்ராகிம் லோடி தப்புக்கணக்கு போட்டு விட்டார். போர்க்களத்தில் ஒரு லட்சம் வீரர்கள் எதிரில் இருந்தாலும் இந்த பன்னிரண்டாயிரம் வீரர்கள் தைரியமாக நின்றனர். இந்தப் போரில் தான் பாபரின் முக்கிய படைத் தளபதியாக விளங்கியவர் அவரது மகனான ஹூமாயூன். துப்பாக்கி வீரர்கள் அவர்கள் பிறகு குதிரை வீரர்கள் அவர்களுக்கு பின் வில் வீரர்கள் என்ற வரிசையில் \/ என்ற வடிவில் பாபரின் படை முன்னேறியது இப்ராகிம் மோடியிடம் இருப்பதோ குதிரை வீரர்கள் அவர்கள் முன்னேறி வந்து தாக்குவதற்கு முன்,  பாபரின் படையில் முன் வரிசையில் இருந்த துப்பாக்கி வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தி தூரத்திலேயே குதிரை வீரர்களை கொன்று விடுவர். இதைக்கண்டு டெல்லியின் படை ஆட்டம் கண்டது. இப்ராஹிம் லோடி மிரண்டு போனார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன் பாபரின் படை "ப" வடிவில் மாறி டெல்லி படையைச் சுற்றி வளைத்து, டெல்லி வீரர்களைக் கொன்று குவித்தனர். போர்க்களத்தில் உயிரிழந்த இப்ராஹிம் லோடி உடலை சகல மரியாதையுடன் அங்கேயே அடக்கம் செய்தார் பாபர். போரில் வெற்றி பெற்று டெல்லியை நோக்கி சென்றார். பின்னாளில் தன் சுயசரிதையில் இந்த யுத்தத்தைப் பற்றி குறிப்பிடும் போது கடவுள் அருளால் சூரியன் உச்சிக்கு வரும்முன் இந்த யுத்தத்தை முடித்து விட்டோம் என்று குறிப்பிடுகிறார். ஆக்ரா கோட்டையை கைப்பற்ற ஹுமாயூன்  தலைமையிலான ஒரு சிறிய படை சென்றது ஆக்ராவின் அரசன் விக்ரம்ஜித்தும் போரில் டெல்லி படை யுடன் இணைந்து போரிட்டு மரணமடைந்ததால் அவரின் குடும்பம் ஆக்ராவின் கோட்டையில் ஒளிந்து இருந்தது. அவர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹூமாயூனிடம் அற்புதமான ஒரு வைரத்தை பரிசாக அளித்தனர் அந்த வைரத்தின் பெயரே பின்னாளில் உலகப் புகழ் பெற போகும் "கோஹினூர் வைரம்".

டெல்லி அரண்மனைக்குச் சென்ற பாபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரண்மனையில் இருந்த இப்ராஹிம் லோடியின் தாயார் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து அரண்மனையிலேயே தங்கிக்கொள்ள அனுமதி அளித்தார். பாபருக்கு இதுவே எமனாக வந்து சேர்ந்தது. பாபருக்கு இந்திய உணவு மிகவும் பிடித்துப்போனதால் அரண்மனை சமையல் செய்யும் பணியில் எப்போதும் ஓர் இந்தியர் இருப்பார். தன் மகனை இழந்த கோபத்திலும் வெறுப்பில் இருந்த இப்ராஹிம் லோடியின் தாயார், அரண்மனையில் இருந்த அந்த இந்திய சமையல்காரரை தொடர்பு கொண்டு பாபருக்கு உணவில் விஷம் வைக்க சொல்லி ஒப்பந்தம் போட்டார். பதிலுக்கு அவருக்கு நான்கு கிராமங்கள் பரிசாக அளிப்பதாக ஒப்பந்தம். ஆனால் இந்த திட்டத்தை அறிந்த பாபர் இந்த திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொடூரமான முறையில் கொல்ல உத்தரவிட்டார்.

தொடர்ந்து பாபரின் படை நாலாபக்கமும் போர் செய்து டெல்லியின் எல்லையை விரிவாக்கம் செய்து வந்தனர். பல சிற்றரசர்கள் பாபருக்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர். ஆனால் பாபரால் ஒருவரை மட்டும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை அவர்தான் சித்தூரை தலைநகராகக் கொண்டு மேவார் நாட்டை ஆண்டுவந்த ராஜபுத்திர மன்னன் மாவீரர் ராணா சங்கா. ஆரம்பம் முதலே அந்நியரான பாபரை எதிர்க்க ராஜபுத்திர அரசர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க ராணா சங்கா எடுத்த முயற்சிகள் தற்போது பலன் கொடுக்க ஆரம்பித்தன. பல ராஜபுத்திர சிற்றரசர்கள் ராணா சங்கா படையுடன் இணைந்து பாபரின் டெல்லி படையை எதிர்க்க தயாராயின. சமயம் பார்த்து பாபரின் படையில் திடீரென்று ஒரு பிரச்சனை. அதுதான் "இந்திய வெயில்". பிறந்ததில் இருந்தே குளிர்ச்சியான சூழ்நிலையில் காபூல் நகரில் வாழ்ந்த வீரர்களுக்கு இந்திய தட்பவெப்ப நிலை ஒத்துவரவில்லை. இந்தியா போதும் காபூலுக்கு செல்ல அனுமதி தாருங்கள் என்று பாபரிடம் பல வீரர்கள் கெஞ்சினர். அதேசமயம் ராணா சங்கா தலைமையில் ராஜபுத்திர படை தங்கள் தாய்நாட்டை காக்க ஆவேசத்துடன் டெல்லி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஒரு மாபெரும் யுத்தம் நடக்க தயாராக இருக்கிறது , ஏற்பாடுகள் அனைத்தும் யுத்த களத்தை நோக்கி விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. பாபர் தன் நெருங்கிய ஆலோசகர்களுடன் போர் வியூகம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது காபூல் நகரைச் சார்ந்த
ஒரு ஜோதிடர் வந்து மன்னர் தற்போது யுத்தத்திற்கு செல்வது நல்லதல்ல என்று ஆலோசனை சொல்ல, சரி என்று கேட்டுக்கொண்ட பாபருக்கு கோபமும், எரிச்சலும் வந்தது. இதற்கிடையில் பிரதம சேனாதிபதி பாபரின் முன் வந்து தயக்கத்துடன் நின்றார். அதை புரிந்து கொண்ட பாபர், என்னவென்று? வினவ சேனாதிபதி விபரத்தைச் சொன்னார். நமது வீரர்களுக்கு இங்கிருக்கும் பருவநிலை ஒத்துக்கொள்ளவில்லை உடம்பெல்லாம் வெப்பமாக இருக்கிறது என்றும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னொரு யுத்தம் என்பதையோ அதுவும் உயிரை துச்சமாக கருதும் ராஜபுத்திர படையுடன் என்பதோ அவர்களுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்குகிறது என்று சொல்ல அதை புரிந்து கொண்ட பாபர், படை வீரர்களை சந்திக்க தானே நேரில் சென்றார். பாபரை கண்ட படைவீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தில் அவ்வளவு உற்சாகம் வெளிப்படவில்லை. அதையும் உணர்ந்த பாபர் படைவீரர்கள் முன் ஒரு எழுச்சியுரை ஆற்றத் தொடங்கினார். ஒரு காலத்தில் நாம் சாமர்கண்ட் நகரைக் கைப்பற்ற போராடினோம். பிறகு சீனாவை கைப்பற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் கருணையால் நாம் இன்று இந்தியாவில் இருக்கிறோம். மாபெரும் டெல்லி சுல்தானையே வெற்றி கொண்டவர்கள் நீங்கள். இப்போது சாதாரண குறுநில மன்னர்களின் படைகளை கண்டு அஞ்சி ஓடினால் வரலாறு நம்மை எவ்வாறு பார்க்கும்? உலகை மற்ற பகுதிகளிலிருந்து ஆள்பவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பிறக்கும்போது உறுதியானது மரணம் மட்டுமே. வெற்றி பெறுவோம் அல்லது வீரமரணம் அடைவோம் என்று உணர்ச்சி பொங்க பாபர் பேசியதும் படைவீரர்களின் ரத்த நாளங்கள் கொதித்தெழுந்தன. பாபரின் படை புது உத்வேகத்தோடு ஒரு தயாரானது.

அந்தப் பக்கம் ராணா சங்கா தலைமையிலான ராஜபுத்திர படை வந்து கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியர்களின் போர் முறையை பாபர் புரிந்து கொண்டிருந்தார். அதற்காக லாவகமான அனைத்து திசைகளிலும் திரும்பும் வகையிலான சக்கரங்களை தன் பீரங்கிகளுக்கு பொறுத்தி இருந்தார். கி.பி. 1527 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -ம் தேதி ஆக்ராவுக்கு மேற்கே 20 மைல் தொலைவில் கண்வா எனும் கிராமத்தில் இப்போது மற்றுமொரு மாபெரும் யுத்தம் தொடங்கியது. போரில் பாபரின் படை வெற்றி பெறும் சூழல் வந்தபோது ராஜபுத்திர படைவீரர்கள் அனைவரும் அவர்களது கோட்டைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். வெகு நேரம் ஆகியும் கோட்டையின் கதவுகள் திறக்கப்படாததால் கோபமடைந்த பாபர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல உத்தரவிட இருந்த சூழலில் கோட்டையின் கதவு திறக்கப்பட்டது. ராஜபுத்திர வீரர்கள் அனைவரும் நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன் கையில் வாட்களை சுழற்றிக்கொண்டு பாபரின் படையை நோக்கி ஓடிவந்தனர். சற்று திகைத்துப் போன பாபருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது தளபதி ஒருவர் முன்வந்து இனி போரில் தோல்வி உறுதி என்பதை அறிந்தவுடன் ராஜபுத்திர வீரர்கள் அவர்களது வீட்டுக்குச் சென்று குடும்பத்தின் மானத்தைக் காக்க தாய், மனைவி, குழந்தை என அனைவரையும் கொன்றுவிட்டு தன் போர் உடையை கழற்றி விட்டு வீர மரணத்தை நோக்கி வருவர் என்று கூற பிரமித்துப் போனார் பாபர். இதுவல்லவா வீரம்? என நெகிழ்ந்தார். ஆனால் அடுத்த நொடி தன் படை வீரர்களுக்கு கட்டளையிட்டார். அனைத்து ராஜபுத்திர வீரர்களின் தலையும் சீவப்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்த யுத்தம் முடிய 10 மணிநேரம் ஆனதாக வரலாறு இருக்கிறது. வட இந்தியாவில் உள்ள ராஜபுத்திர வம்சம் குடும்பங்கள் அனைத்தும் இந்த கண்வா யுத்தத்தில் ஒரு ஆண்மகனை யாவது இழந்தது. போரில் வென்ற பிறகு டெல்லி திரும்பியவுடன் தன் மகன்கள் அனைவரையும் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி அங்கிருந்து ஆட்சி செய்ய உத்தரவிட்டார். இளவரசர்களான ஹூமாயூன், காம்ரான்,  அஸ்காரி, ஹிண்டால் என அனைவருக்கும் படைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இளவரசர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு டெல்லியின் எல்லையை விஸ்தரித்துக் கொண்டே சென்றனர். இந்த காலகட்டத்தில் தான் முகலாய சாம்ராஜ்யம் ஆணித்தரமாக இந்தியாவில் அமைந்தது. போர்க்களத்தில் ஆவேசம் காட்டினாலும் தனிப்பட்ட முறையில் பாபர் மிகவும் மென்மையானவர், ஒழுக்கம் கொண்டவர், தான் கற்கும் அனைத்தையும் குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர். இந்தியாவில் உள்ள பறவைகள், செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் தோட்டம் எப்படி போடுவது? அதை எவ்வாறு பராமரிப்பது? என அனைத்தையும் பாபர் குறித்து வைத்திருந்தார். ஹூமாயூன் திடீரென்று காய்ச்சலில் விழுந்த எவ்வளவு வைத்தியம் பார்த்தும் காய்ச்சல் குறையவில்லை நாட்டிலிருந்த அனைத்து வைத்தியர்களும் சிகிச்சை செய்தும் இளவரசரின் காய்ச்சல் குறையவில்லை பாபருக்கு கவலை முற்றி அவரே நேரில் பார்க்க வந்தார். மகன் இறக்கும் தருவாயில் இருப்பதை பார்த்த பாபரால் தாங்க முடியவில்லை. இறைவன் முன் வெகுநேரம் பிரார்த்தனையில் இருந்தார் மாயம் செய்ததுபோல் ஹூமாயூன் உடல் நலம் தேறி எழுந்தபோது பாபரின் உயிர் பிரிந்தது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறினாலும் வேறு சிலரோ ஹூமாயூன் உடல்நலம் தேறினார் என்பதும் உண்மை அதன்பிறகே பாபர் மறைந்தார் என்பதும் உண்மை ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு உயில் எழுதியதாகவும் அதில் ஹூமாயூனை பட்டத்து இளவரசராக நியமித்து அவருக்கு அறிவுரை வழங்கினார். அதன் பிறகே பாபர் மறைந்தார் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ பாபர் இறந்ததோ கி.பி. 1530 ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ம் தேதி என்பது மட்டும் உண்மை. முதலில் பாபரின் உடல் டெல்லியில் புதைக்கப்பட்டது. ஆனால் அவரின் உயிலின் படி 9 ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப் பட்டு,  காபூலுக்குக் கொண்டுச் செல்லப் பட்டு அங்கு அவர் கட்டிய பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது. வெறும் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அந்த மாவீரன் நம்மை விட்டு விடை பெறுகிறார். 

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Benefits of Income Tax Return Filing