இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

 உழைப்பு மட்டும் இருந்தால் அடிமையும் அரசன் ஆகலாம் என நிரூபித்தவர் தான் குத்புதீன் அய்பக். கடைத்தெரு ஒன்றில் அடிமையாக ஏலத்திற்கு வந்த குத்புதீனை முதலில் ஒரு ஆப்கான் வியாபாரி வாங்கினார். பலமுறை லாபத்திற்கு கைமாறிய அந்த அடிமை இறுதியாக ஒரு வியாபாரியிடம் கை மாறினான். கோட்டையில் சுல்தான் முகமது கோரிக்கு அடிமைகள் தேவை என்பதை அறிந்த அந்த வியாபாரி, குத்புதீனை அழைத்துச் சென்றார். குத்புதீனைப் பார்த்தவுடன் சுல்தானுக்குப் பிடித்துப் போனதால் வியாபாரிக்கு மிகவும் லாபம். அரண்மனையில் அடிமையாக தன் பணியைத் தொடங்கிய அய்பக், மிக விரைவில் சுல்தானின் முழு நம்பிக்கையைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து குதிரைப் படையில் ஒரு தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். டெல்லி மன்னன் பிருத்விராஜுடன்  நடந்த போரில் ஒரு தளபதியாக காட்டிய வீரம் சுல்தானை மிகவும் கவர்ந்தது. பிறகு குஜராத், பீகார் ,வங்காளப் பகுதிகளை வென்று சுல்தானின் காலடியில் சமர்ப்பித்தான் அய்பக். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுல்தான் டெல்லி பிரதிநிதியாக குத்புதீன் அய்பக்கை நியமித்து ஆப்கானிஸ்தான் திரும்பினார்.


அதைத் தொடர்ந்தும் அமைதியாக உட்காரவில்லை. இந்தியாவில் முதன்முதலாக ஒரு நிலையான இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவி திறமையாகவும் கட்டுப்பாடுடனும் ஆட்சி புரிந்தார். தனக்கு விசுவாசமானவர்களுக்கு கைநிறைய சன்மானம் தரும் குத்புதீன் அய்பக்கிற்கு, தனக்கு தொல்லை கொடுத்தால் இரும்பு கரம் கொண்டு அடக்கவும் தெரியும். இந்தியாவில் முழுமூச்சுடன் இஸ்லாம் மதத்தை பரவச் செய்தார். ஆதலால் இவர் இடித்துத் தள்ளிய கோயில்கள் மட்டும் ஆயிரத்திற்கும் மேல். டெல்லியை தலைநகராகக்கொண்டு கம்பீரமாகவும் திட்டவட்டமாகவும் குத்புதீன் ஐபக் நடத்தி வரும் இந்த ஆட்சியை "அடிமைகளின் சாம்ராஜ்யம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவரின் ஆட்சி நான்கு ஆண்டுகளே நீடித்தது பயிற்சியின்போது குதிரையிலிருந்து  எசகு பிசகாக விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். 


குத்புதீன் ஐபெக்கை தொடர்ந்து டெல்லி அரியணையில் அமர்ந்த ஆராம்ஷா வின் ஆட்சியே கிறுக்குத்தனமாக அமைந்ததால், அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடி குத்புதீன் மாப்பிள்ளையான இல்தூத் மிஷ் ற்கு செய்தியனுப்ப,  படையுடன் வந்து சேர்ந்தார். நடைபெற்ற குட்டி போரில், ஆராம்ஷா வை வென்று அரியணையைக் கைப்பற்றினார் இல்தூத் மிஷ். சுல்தான் முகமது கோரியிடம் அடிமையாக வாழ்வை தொடங்கிய குத்புதீனைப் போலவே,  குத்பதீன் சுல்தானாக இருந்த போது அவரிடம் வாழ்வை தொடங்கியவர் தான் இல்தூத் மிஷ். வரலாறு மீண்டும் திரும்பியது. இவரது ஆட்சி காலத்தில் தான், செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியப் படை சிந்து நதி வரை வந்து நின்று, இந்தியா வா? பாரசீகமா?  என்ற கேள்வியில் பாரசீகத்தைப் பதிலாக தேர்ந்தெடுத்ததால் வட இந்தியா பெரு மூச்சு விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் குவாலியர், மால்வா, உஜ்ஜெயினி போன்ற பகுதிகள் மேல் போர் தொடுத்து, வென்று, கபளீகரம் செய்து கொண்டாடியது டெல்லி படை. அங்கிருந்து வரும் வழியிலேயே சுல்தான் கடுமையான காய்ச்சலில் விழுந்தார். சுல்தானுக்கு மகன்கள் யாரும் சரியாக அமைய வில்லை என்பதால் தன் மகளுக்கு ஆட்சிப் பொறுப்பு சேர வேண்டும் என நினைத்தார். படுக்கையில் சுல்தானுக்கும், மரணத்திற்கும் நடந்த யுத்தத்தில் மரணம் வென்றது. இருப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்த இல்தூத் மிஷ் கி.பி. 1236 ஆண்டு ஏப்ரல் 29 அன்று இறந்தார். குத்புதீன் அமைத்துச் சென்ற அஸ்திவாரத்தின் மேல் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை வெற்றி கரமாக நிறுவினார் இல்தூத் மிஷ் என்றால் அது மிகையல்ல. 

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

Benefits of Income Tax Return Filing

UDYAM - Whether a boon or bane for MSMEs