இந்தியாவின் கதை : அத்தியாயம் 7- முகமது கோரி
கி. பி. 1149 ஆம் ஆண்டில் இன்றைய ஆப்கானிஸ்தானின் கோரி எனும் இராஜ்ஜியத்தில் பிறந்த ஒரு குழந்தை தான், தெற்காசியாவில் முஸ்லீம்களின் இராஜ்ஜியம் அமைய காரணமாக அமையப் போகிறது என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த குழந்தையின் பெயரே, "முகமது கோரி".
இன்றைய ஆப்கானிஸ்தானின், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்றநாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தார். ஆனால் அந்த இடத்திற்கு அவர் சுலபமாக வர வில்லை. 1173 இல் கஜினி முகமது வின் சொந்த நகரான கஜினியைக் கைப்பற்றி அரச வம்சத்தைக் கூண்டோடு அழித்தார். 1175 இல் முல்தான் பிரதேசத்தைக் கைப்பற்றித் தன் அரசோடு இணைத்துக் கொண்டார். 1176 இல் குஜராத்தைத் தாக்கி, அதன் அரசி நாயகி தேவியிடம் தோற்று ஓடினார். இதே காலகட்டத்தில் டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருப்பது, சௌகான் இனத்தின் கடைசி மன்னர் பிருத்விராஜ் சௌகான். இவருக்கு வரலாற்றில் பலச் சிறப்புகள் உண்டு. அதில் அவருடையக் காதல் திருமணம் முக்கியமானது. பிருத்விராஜ் ஜூம், கன்னோசி நாட்டு மன்னன் ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தையும் மையல் கொண்டிருந்தனர். இதை அறிந்த ஜெயச்சந்திரன், உடனே சம்யுக்தைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பிருத்விராஜைத் தவிர அனைத்து இளவரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார். ( தகப்பன்களுக்கு ஏன் தான் இந்த வரட்டு கௌரவமோ ? ). தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாய வேண்டுமே? அது தானே உலக நியதி?
பிருத்விராஜ் போன்ற ஒரு சிலையை ஏற்கெனவேச் செதுக்கி வைத்திருந்தாள் சம்யுக்தா. சுயம்வரம் தினத்தன்று அந்த சிலையை ஒரு வாயிற் காப்பாளன் போல் நிற்க வைத்து, அனைவரது முன்பும் மாலை போடும் போது அந்த பிருத்விராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மணாளனாக ஏற்றுக் கொண்டாள்.
இதையெல்லாம் அறிந்த பிருத்விராஜ் சௌகான், மின்னலாக வந்து சம்யுக்தாவைத் தூக்கிச் ( கூட்டிச்) சென்றார். இது அனேகம் பேருக்குத் தெரிந்த உணர்ச்சி பூர்வமான காதல் வரலாறு. ஆனால் அது நெடு காலம் நிலைக்க வில்லை.
கி. பி. 1191 இல் டெல்லியைத் தாக்க முகமது கோரி வருகிறான். மிகக் குறுகிய காலத்தில், சிதறிக் கிடந்த இராஜ புத்திர குறு நில அரசர்களை ஒன்றினைத்து மாபெரும் படையைத் தயார் செய்து கோரியைத் தோற்கடித்தார் சௌகான். இந்தத் தோல்வியைச் சற்றும் எதிர்பார்க்காத கோரி, கோபத்தில் கொந்தளித்தான். பிருத்விராஜ் சௌகான் அன்றே முகமது கோரியைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் "பெருந் தன்மையுடன் " கோரியைச் சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தார். சில மாதங்களிலேயே ஒரு மாபெரும் படையைத் திரட்டி பஞ்சாப் வழியாக டெல்லியை நோக்கி முன்னேறினான், கோரி. இந்த முறை புதிதாக 10,000 வில்லேந்திய குதிரைப் படையை இனைத்திருந்தான். சென்ற முறை சௌகானுக்கு உதவிய சிலர் இம்முறை உதவ வில்லை. பிருத்விராஜ் க்கு ஒரு முக்கியமான இடத்தில் இருந்து உதவி கிடைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி அமைந்திருக்கும். தன் மகளை இழந்த "அவமானத்தால்" மறுகிக் கொண்டிருத்தான் ஜெயச்சந்திரன். செல்வாக்கும், படை பலமும் கொண்ட மாமனாரின் உதவி மருமகனுக்குக் கிடைக்க வில்லை. மருமகனுக்கும் உதவி கோர விருப்பமில்லை. விளைவு - வில்லனுக்குச் சாதகமாய்ப் போனது. இரண்டாம் யுத்தத்தில், ஆப்கான் படையினர் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டு பிருத்விராஜை கைது செய்தனர். நேர்மையாக யுத்தம் செய்த இராஜ புத்திர வீரர்கள் வெட்டி, வீழ்த்தப் பட்டனர். பிருத்விராஜ் சௌகானையும் கொலை செய்த பிறகு, டெல்லி அரண்மனைக்குள் நுழைந்தான், முகமது கோரி. அதற்கு முன்னரே, சம்யுக்தா மற்றும் அரச குல பெண்கள் தீக்குளித்து வீரச் சொர்க்கம் புகுந்து இருந்தனர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். வேறு சிலரோ, முகமது கோரி, இராணி சம்யுக்தாவை பலமுறை வன்புணர்ச்சி செய்து கொடுமை படுத்திக் கொலைச் செய்தான் எனவும் கூறுகின்றனர். கன்னோசி மன்னன் ஜெயச்சந்திரனையும் முகமது கோரி விட்டு வைக்க வில்லை. மருமகனுக்கே உதவாத இந்தத் துரோகியை விடக் கூடாது என்று தீர்த்துக்கட்ட ஆணையிட்டான்.
நாம் இங்கே சற்று ஆராய வேண்டும். இந்திய வீரர்களுக்கு என்ன குறைச்சல்? முன்னேறிய நாகரீகம், மதிநுட்பம் வாய்ந்த அமைச்சர்கள், படைபலம், முன்னேறிய போர்த் திட்டம் என எல்லாம் இருந்தும் ஏன் அன்னியப் படையெடுப்பின் போதெல்லாம் வெற்றிகளை விடத் தோல்விகளை அதிகமாக இந்தியர்கள் தழுவ நேர்ந்தது? தொடர்ந்து, வெளிநாட்டவர்கள் படையுடன் புகுந்தும் இந்திய குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து எந்த ஒரு தற்காப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஒரு பரிதாபகரமான உண்மை.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் இந்திய இராஜபுத்திர மன்னர்கள். தவிர, மறதி என்கிற வியாதியும் அவர்களை பீடித்திருந்தது. ஒவ்வொரு முறையும் அந்நியப் படை வரும்போது விழித்துக்கொண்டு அவசரகதியில் அரைகுறையாக ஒருங்கிணைவது, படையெடுப்பு முடிந்தவுடன் எல்லாமே மறந்து விடுவதும் பிறகு பழையபடி கச்சிதமாகப் பிரிந்து உள்ளூர் சண்டையில் இறங்குவதும் அவர்களுக்கு வழக்கமாகிப் போனது. இந்தியாவிற்குள் நுழைய இருந்த ஒரு சில இடங்களைக் காக்க ஒரு சிறியக் கோட்டைக் கூட எழுப்ப மறுத்தனர். உங்களைக் காக்க, நான் ஏன் கோட்டைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இராஜப் புத்திர வீரர்கள், நேரடிப் போரில் மாவீரர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் "போர் தர்மம்" என நினைத்து எதிரிகளை உயிருடன் விட்டு விடுவர். பொதுவாகவே, இந்தியர்களுக்கு போர் என்பது, வீரம் கலந்த பொழுது போக்கு. ஆகையால் தற்காப்புக்கு மட்டுமேப் போர்ச் செய்தனர். வலியச் சென்றுத் தாக்குவதேச் சிறந்தத் தற்காப்பு என உணர மறுத்தனர். ஆனால், எதிரிகளின் கதை வேறு. மலைகளையும், பாலைவனத்தையும், நதிகளையும் கடந்து அவர்கள் இந்தியா வருவது, டெல்லியைக் கைப்பற்றி இந்தியச் செல்வங்களைக் கொள்ளை அடிப்பது என்ற ஒரே நோக்கில் தான். அதனால் தான் அவர்கள் அதிகமாக வெற்றி பெற்றனர். இந்த காரணமே, பின்னாளில் வரப்போகும் மொகளாயர்களுக்குச் சாதகமாய்ப் போனது. ஆங்கிலேயர்களுக்கு அதை விடச் சாதகமாய்ப் போனது.
முகமது கோரி தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முன், தன் சார்பாக வட இந்தியாவை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தது, தன் பிரதம தளபதிகளுள் ஒருவனை. அவன் பெயர், குத்புதீன் அய்பெக். முகமது கோரிக்கு அடிமையாகச் சேவகம் புரிந்து, படிப்படியாகத் தளபதி ஆனவன். எத்தனையோ மன்னர்கள் கட்டிய மாளிகைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக, அடிமையாக வாழ்வை ஆரம்பித்த இந்த குத்பதீன் அய்பெக் தூக்கி வைத்த அதிசயம், இன்றளவும் டெல்லியில் உயர்ந்து நின்று இவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அது தான், "குதுப்மினார்".
அடிமைகளின் அரசாங்கம்
அடுத்த அத்தியாயத்தில்
ஆரம்பமாகும்.
Comments