இந்தியாவின் கதை : அத்தியாயம் 6 - முகமது கஜினி

 இன்று பள்ளித் தேர்வில் முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் வரை, அனைவருக்கும் ஊக்கமாகச் சொல்லப்படுவது, முகமது கஜினியின் கதை. தோல்வி அடைந்தும் 17 முறை விடாமல் இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்பது கதை. உண்மையில் அவன் தோல்வி அடைந்ததால் மறுபடியும் இந்தியா மீதுப் படையெடுத்து வரவில்லை. இந்தியாவைக் கொள்ளை அடிக்கவே அத்தனை முறையும் படையெடுத்து வந்தான். ஆதலால்,  அநேகமாக அவனதுப் பதினேழு படையெடுப்புகளுமே வெற்றிதான். ஆப்கானிஸ்தானில் காபூலுக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. கி.பி. 977-ல் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பிரபு கஜினியைத் தலைநகராக்கி ஆட்சி புரிந்தார். அவருடைய மகன்தான் முகமது கஜினி. கி.பி.998-ல் தந்தை இறந்த பிறகு, அரியணையில் அமர்ந்தபோது அவனுக்கு வயது இருபத்தேழு. 

முகமது கஜினி

இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தப் புதிய நூற்றாண்டுத் தங்களைப் பொறுத்தவரைப் பெரும்

 தலைவலியோடு ஆரம்பிக்கப் போகிறது என்பதை வட இந்திய அரசர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கி. பி. 1000-ல்  ஆரம்பித்தது, இந்தியாவை நோக்கிக் கஜினியின் முதல் படையெடுப்பு.

 ஏன் அப்போது எல்லோருக்குமே முதல் இலக்கு இந்தியா? காரணம் உண்டு..

 மத்திய ஆசியாவிலும் சரி,  ஆப்கானிஸ்தானிலும் சரி,  அரேபியாவிலும் சரி, மன்னராக மகுடம் சூட்டிக் கொண்டதும் அவர்கள் கேட்டு மலைத்த கதைகள் இந்தியாவைப் பற்றித் தான். இந்திய மண்ணில் விண்ணை முட்டும் கோயில்கள், கட்டி முடிக்கப்பட்ட மாட மளிகைகள், கொட்டிக்கிடக்கும் ஆபரணங்கள் - இதைப்பற்றி பலர் விவரமாக விளக்க, வெறிச்சோடிய பாலைவனத்தையும்,  கரடுமுரடான மலைத் தொடர்களையும் சூழ்நிலையாக கொண்டு ஆட்சி புரிந்த அம்மன்னர்கள் கண்ணில் ஆர்வம் பொங்கி எழுந்ததில் ஆச்சரியமில்லை. அவ்வாறு தான் மாபெரும் குதிரைப் படையோடுக் கால தாமதம் செய்யாமல் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தான் முகமது கஜினி. சிந்து நதியைக் கடந்துப் பஞ்சாப் பீடபூமியில் அவன் படை புகுந்த போது, அதை மடக்கி எதிர்கொண்டது, பஞ்சாப் மன்னன் ஜெயபாலனின் படை. அசுரத்தனமும், அதிபுத்திசாலித்தனமும் கலந்துப் போரிட்ட ஆப்கான் படையிடம் ஜெயபாலனின் வீரர்களின் வீரம் எடுபடவில்லை. முதல் போரிலேயே பெரும் வெற்றிப் பெற்ற கஜினியின் படை, பஞ்சாப் பூமியில் அவர்கள் கொள்ளையடித்தச் செல்வத்தை அள்ளிக் கொண்டு ஒட்டகங்கள் மீது ஏற்றி வைப்பதில் ஆயிரமாயிரம் ஆப்கான் வீரர்கள் பலமணி நேரம் செலவிட்டனர். வந்த வேகத்தில் ஊர் திரும்பினர். ஒவ்வொரு முறையும் இதே கதைதான். இதே கொள்ளை, கொலைகள், பிறகு ஊர் திரும்பல். கஜினிக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி. பி.  ஆயிரத்தில் ஆரம்பித்து, அநேகமாக ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா மீது படையெடுப்பதை ஒரு பிரத்யேகத் திருவிழாவாகக் கொண்டாடினான், கஜினி. 

ஒரு ஓநாயின் வாயில் சிக்கிக் குதறப்பட்ட மான் குட்டிகளைப் போல சௌராஷ்டிரம், கன்னோசி, மதுரா, தானேஸ்வர் என்று ஒவ்வொன்றாகக் கஜினிப் படையின் வாள்வீச்சில் இரத்தம் பூசிக் கொண்டது. இந்தியாவில் முல்தான்  பிரதேசத்தை ஆண்ட சுல்தான் தாவூத் எனும் இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த சுல்தானையும் கஜினி விட்டு வைக்கவில்லை. கொள்ளை என்று இறங்கியப் பிறகு எதிரி எவனாக இருந்தால் என்ன? தாவூத்தை வெட்டி சாய்த்து, முல்தான் தலைநகரைத் தரை மட்டமாக்கினான் முகமது கஜினி. கஜினிக்கு இன்னொரு விசித்திரமான,  கொடூரமானப் பழக்கம் இருந்தது. அவன் வெற்றிகொண்ட மன்னர்களின் கைவிரல்கள் அத்தனையும் வெட்டி எடுத்துக் கொண்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்படி அவன் ஏதோ தபால் தலைகளைப் போல சேகரித்த விரல்கள் மட்டும் ஆயிரக்கணக்கில்.

 இந்தியாவில் ஒவ்வொரு முறையும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டிய மறுகணம் ஆப்கான் படைக் குறிவைத்தது இந்துக்களின் கோயில்களை நோக்கித்தான். "மாதக்கணக்கில் நம் வீரர்கள் அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டிய செல்வம் அனைத்தையும் ஒரே பாய்ச்சலில் அள்ளிக்கொண்டு வர வேண்டுமா? அரண்மனைகள் கூட அவசரம் இல்லை, நேரத்தை வீணாக்காமல் முதலில் கோயில்களின் பக்கம் நம் படையைத் திருப்புங்கள். அங்கு நம்மை வழிமறிக்க அகழிகள், அரண், ஆட்படை என எதையும் இந்தியர்கள் வைத்திருப்பதில்லை" என்று முன்கூட்டியே கஜினிக்கு இந்தியாவைப் பற்றி ஒற்றர்கள் விவரித்து இருந்தார்கள்.

சோமநாதர் கோயிலுக்கு நேர்ந்த உச்சக்கட்ட பயங்கரம்: 

குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோம்நாத் எனும் ஊரில் கடற்கரையோரம் அமைந்திருந்த, சோமநாதர் ஆலயம் உலகப் புகழ்பெற்றது. கர்ப்பக்கிருகத்தில் காட்சியளித்தச் சிவலிங்கத்தை, கட்டிட வல்லுனர்கள் அந்தரத்தில் மிதக்கும் படி அமைத்திருந்தது ஒரு அதிசயம். சோமநாதர் ஆலயச் சொத்தில் பத்தாயிரம் கிராமங்கள் அடக்கம் என்றால், கோயிலில் கொழித்தச் செல்வச் செழிப்பைப் பற்றிப் புரிந்துக் கொள்ளலாம். இது தவிர மன்னர்களும், செல்வந்தர்களும், பக்தர்களும், காணிக்கையாக அளித்தத் தங்கங்களும், வைரங்களும், முத்துக்களும் ஆபரணங்களும் ஒரு மலைப் போல குவிந்திருந்தது. இன்னொரு புறம் கோயில் கஜானாவில் பெரிய மலையாக நிரம்பி வழிந்தப் பொற்காசுகள் இருந்தன.  சோமநாதர் கோவிலில் பூஜைகள் நடத்த நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்கள் மட்டும் ஆயிரம் பேர். அவ்வளவு ஏன்? ஒவ்வொரு நாளும் இரு முறை கடலில் இருந்து ஒரு பெரும் அலை கிளம்பி முன்னேறிச் சற்றுத் தொலைவில் இருந்த சோமநாதர் ஆலயப் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கிச் செல்லும் என்பது ஊர் மக்களால் வியந்து பேசப்பட்டத் திருத்தலம் அது.

இன்றைய சோம நாதர் ஆலயம்
டிசம்பர் 1025,  பதினேழாவது  முறையாகப் புழுதிப் பறக்க ராஜஸ்தான் 



பாலைவனத்தைப் புயலாகக் கடந்து குஜராத்தின் சோம்நாத் ஊருக்குள்  கஜினியின் படை வந்தது.

தொலைவிலிருந்தே, ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் புகழ்வாய்ந்த ஆலயத்தைத் தன் படையின் முன்னணியில், குதிரையில் இருந்தே பார்வையிட்ட கஜினியின் கண்களில் ஆர்வமும், அவசரமும் கொப்பளித்தது. அவனது இதயத்துடிப்பு உற்சாகத்துடன் அதிகரித்தது. "முன்னேறுங்கள்" என்று தன் படைக்கு ஆணையிட்டான். நீலமான ஈட்டிகளுடனும், அகலமான வாட்களுடனும் பாய்ந்தது ஆப்கான் படை. சோமநாதர் கோயில் தனக்கு ஏதோ ஒரு திறந்த வீடாக இருக்கும் என்று நினைத்தான் கஜினி, ஆனால் இப்படி வழிமறித்து எதிர்ப்பார்கள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆம்....  ஓட்டம் எடுப்பதற்குப் பதில் பல்லாயிரக்கணக்கான ஊர் மக்களும், கோயிலில் பணிபுரிபவர்களும், அர்ச்சகர்களும், பக்தர்களும் திரண்டெழுந்து கூவிக்கொண்டும், அழுது கொண்டும், கதறிக்கொண்டும் ஓடி வந்து  தனது கையில் கிடைத்த அத்தனை பொருட்களைக் கொண்டும் ஆப்கான் படையை எதிர்த்து நின்றார்கள். கஜினியின் கண்கள் சிவந்தன. "தடுப்பவர்களின் தலையைத் தரையில் உருளச் செய்யுங்கள்" என்று கர்ஜித்தான் கஜினி. ஆப்கான் படை வீரர்களின் ஆயிரக்கணக்கான வாட்கள் சுழலத் தொடங்கின. வெட்டித் தள்ளத் தள்ள மேலும் மேலும் மக்கள் முன்னேறி வந்து வழிமறித்தனர். அன்று சோமநாதர் ஆலயத்தின் வெளியே துண்டாடப்பட்டு உயிரற்று வீழ்ந்து கிடந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை கடல் அலைகள் குளிப்பாட்டி சிவந்தன. இத்தனை வன்முறைக்குப் பிறகு வெற்றிகரமாக ஆலயத்துக்குள் நுழைந்த கஜினி முகமது, கோயிலின் செல்வச் செழிப்பைக் கண்டு பிரமித்துப் போனான். செல்வங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அள்ளி மூட்டை கட்டினார்கள் படை வீரர்கள். கடைசியாகக் கர்ப்பக்கிருகத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்த சிவலிங்கத்தை நோக்கி கஜினியின் பார்வை திரும்ப, மேலும் பிரமித்தான். உடனே ஆச்சரியத்துடன் பக்கத்தில் இருந்த படை வீரனின் ஈட்டியை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஈட்டியை சிவலிங்கத்தை சுற்றி நாலாபுறமும் சுழற்றி பார்த்த கஜினியின் கண்களில் இருந்த வியப்பு மெல்ல மெல்ல அகன்றது.  மேல் உள்ள கூரையையும் பக்கவாட்டு சுவற்றையும் இடித்துக் தள்ளுங்கள் என படைவீரர்களுக்கு உத்தரவிட்டான். படை வீரர்களும் இடித்துத் தள்ள, கொஞ்சம் கொஞ்சமாக சிவலிங்கம் நகன்றது, பின்னர் தொப்பென்று கீழே விழுந்தது.இது ஏதோ காந்த சக்தி என கஜினி புரிந்துகொண்டான். பின்னர் சிவலிங்க சிலையை எடுத்துக்கொண்டு கோயில் முன் போட்டு உடைத்தனர்.  படைவீரர்கள் ஆர்ப்பரிக்க அன்று, அந்த வானமும் சிவந்தது.

 சோமநாதர் கோயிலில் நடந்த இத்தனை கொடூரத்தையும் விபரமாக, சற்றே வருத்தத்துடன் எழுதியிருப்பவர் அல்காஸ்வினி எனும் அரபு நாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர். காரியம் முடிந்த பிறகு கடைசி முறையாக இந்தியாவை ஒரு நிறைவான பெருமூச்சுடன் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றான் முகமது கஜினி. சோமநாதர் கோயிலில் இருந்து அவன் கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறு டன் எடைக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்ராஜ்யம் நிறுவும் எண்ணம் இல்லை என்பதால், கஜினி தேவையில்லாத கொடுமையை நிகழ்த்தியதாகவே அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் கூறுகிறார்கள். முகமது கஜினி கொலை வெறிபிடித்த ஒரு கொள்ளைக்காரனாக தான் நாம் கருத முடியும். இதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. அதே வேளையில்,  கொள்ளை அடித்தப் பெரும் செல்வத்தைக் கொண்டு தன் சொந்த ஊரான கஜினியை சிறந்த நகரமாக உருவாக்கினான். அவனது மக்கள் அனைவரும் சகல வசதிகளுடன் வாழச் செய்தான். கஜினிக்கு அப்படி ஒரு சிறிய நல்ல பக்கம் இருக்கத்தான் செய்தது.

 வடமேற்கில், தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒரிசா, வங்காளம் என அனைத்து நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின் முன் மண்டியிட்டது.கங்கை நதி நீரை குடங்களில் நிரப்பி தான் வெற்றி கண்ட மன்னர்களின் தலை மீது வைத்து தன் ஊருக்குத் திரும்பினான் அந்த மன்னன். அந்த மாவீரன் தான் தமிழகத்தை ஆண்ட இராஜேந்திர சோழன். இந்தியாவில் வடமேற்கே கஜினி படையெடுத்து வந்திருக்கும் விஷயத்தை நிச்சயம்  இராஜேந்திர சோழனிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இராஜேந்திர சோழனின் விருப்பம் கடற்படையுடன் சென்று மலேயா மற்றும் சுமத்ராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் கஜினி முகமது மற்றும் இராஜேந்திர சோழன், இருவரும் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்காமலேயே திரும்பினார்கள் என்கிறது வரலாறு. ஆப்கானிஸ்தான் திரும்பிய கஜினி முகமது ஒரு விஷக் காய்ச்சலில் படுத்து கி.பி.1030-ல் இறந்துபோனச் செய்தி கேட்டு வட இந்தியா நிம்மதிப் பெருமூச்சு விட்டது என்றே கூறலாம்.

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

Benefits of Income Tax Return Filing

UDYAM - Whether a boon or bane for MSMEs