இந்தியாவின் கதை- அத்தியாயம் 3. பாரசீகப் படையெடுப்பு
பாரசீகர்கள் இந்தியாவின் தில்லியை ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் பெரும் பகுதியை கூட ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் வரலாற்றில் இருந்து பாரசீகர்களை முழுவதுமாக நீக்க என்னால் முடியவில்லை. ஏனெனில், இந்திய மண்ணில் நாடு பிடிக்கும் வேட்கையுடன் கால் பதித்த முதல் அயல் நாட்டு சாம்ராஜ்யம் இது. முதலில் வந்தது அலெக்சாண்டர் என சிலர் கருதுவதுண்டு. ஆனால் அலெக்சாண்டர் பின்னாளில் இந்தியா வர காரணமே, பாரசீகர்கள் தான். பாரசீகத்தில் சைரஸ் (Cyrus) என்ற மன்னர் படை பலத்தால் தனது அரசை சாம்ராஜ்யமாக மாற்றுகிறார். இவரது ஆட்சி கி. மு. 559 முதல் கி. மு. 530 வரை இருந்தது. தனது சாம்ராஜ்யத்திற்கு அக்கிமேனியன் (Achimeninan Empire) பேரரசு என பெயர் சூட்டுகிறார். இந்த பேரரசின் மாபெரும் படை, அதன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. மேற்கில் கிரேக்கம் வரையிலும், கிழக்கில் காந்தாரம் (இன்றைய வட பாகிஸ்தான்), சிந்து நதி வரை அதன் எல்லை பரந்து விரிந்தத...